23 மார்ச் 1993 - செவ்வாய்
ஏற்கனவே நடத்தி முடித்திருந்த வரலாற்றுப் பாடத்தைத் திருப்பிப்
பார்க்கும் நோக்கில் நேற்றைக்கு திருமதி.மல்லிகா ஆரம்பித்த போதே வழக்கமான அந்த அசௌகரிய உணர்வு எனக்குள் வியாப்பித்தது. தொடக்க நிலை நான்காம் வகுப்பு தொடங்கிய பிறகு இந்த மூன்று மாதங்களில் சிங்கப்பூரில் ஜப்பானியராட்சி குறித்து ஆசிரியர் முன்பும் ஒரு முறை விரிவாகப்
பேசியிருக்கிறார். கூடுதல் தகவல்களாக ஜப்பானிய இராணுவ அதிகாரிகள்
சிங்கப்பூரில் அப்பாவி மக்களின் தலைகளைக் கொடூரமாகக் கொய்து விடுவதையும், வெட்டுண்ட தலையை எல்லோரும் பார்க்கும்படி சுவர் மீது மாட்டி வைத்திருந்ததையெல்லாம் சொல்லச் சொல்லச் சிறார்கள் பயமுழி முழிப்பர். பேயறைந்தது போல அமர்ந்திருக்கும் சிறுமிகளில் வெகு சிலர் தலையைத் திருப்பி என்னைப் பார்ப்பதா வேண்டாமா என்று குழம்புவது போலமர்ந்திருப்பர். இடைவேளையில் எல்லோரும் கூடியிருந்து அந்தக் கதைகளை மீண்டும் பேசும் போது பேசுவதைக் கேட்க வேண்டியிருந்ததை நான் மிக அஞ்சினேன். கேட்கக் கேட்க உள்ளூர என்னையே நான் வெறுக்க ஆரம்பித்தது போலுணர்ந்தேன்.
நேற்று பாடம் நடந்து கொண்டிருந்த போது குண்டன் முன்னிருக்கையிலிருந்து ஒருமுறை திரும்பி என்னைப் பார்த்தான். சின்னக் கண்களில் வலுவில் வரவழைத்துக் கொண்ட கோபம் கூர்மையாகத் தெரித்தது. இரண்டாவது முறை பார்த்த போது முணுமுணுப்பாய் என்னைக் 'கொலைகாரி' என்றழைத்தான். அவன் சீனத்தில் சொன்ன அந்த ஒற்றைச் சொல் ஆசிரியருக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை, மாணவர்களில் மிகச் சிலருக்கு மட்டும் கேட்டிருக்கலாம். என் கண்களில் கண்ணீர் சேர்வதை உணர்ந்த போது தைரியத்தை வரவழைத்துக் கொள்ள
நான் அம்மா சொன்னதைத் தான் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியதிருந்தது. ஆனாலும், கசிந்த கண்ணீர் கன்னத்தில் வழிவதை என்னால் தடுக்க முடியவில்லை.
பள்ளி விட்ட பிறகு பேருந்திலேறி வீட்டிற்குப் போனதும் அம்மாவைக் கண்ட கணத்தில் சடாரென்று உடைந்து முன்பைவிட மிக அதிகமாக அழுதேன். என்னைத் தேற்றத் தெரியாமல் அம்மா விழித்தார்.
பாலர் பள்ளி முதலே ஒரு சிலரின் ஜாடைமாடையான விமரிசனங்கள், நேரடியான கேலிகள், குத்தலான பேச்சுக்கள், இனம் தொடர்பான வசவுகள் என்று நிறைய கேட்டிருந்தேன். பாதிக்கு மேல் அப்போது புரிந்ததில்லை. குறிப்பாக ஓர் ஆசிரியர் என்னை நடத்திய விதம் ஏனென்று விளங்காமலே இருந்து வந்தது. அவற்றுக்கெல்லாம் விடையாகக் கிடைத்தது தொடக்கப்பள்ளியின் வரலாற்றுப்பாடம். குறிப்பாக, சுவாரஸியம் சேர்க்கவென்று புனையப்பட்டது போலத் தோன்றும் ஆசிரியரின் மேலதிக தகவல்கள்.
இன்றைக்கு அம்மா என்னுடன் பள்ளிக்கு வந்து குண்டனை என்னிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். அவன் மிகவும் அலட்சியப் பார்வை ஒன்றைப் பார்த்துக் கொண்டே அவ்விடத்தை விட்டு விலகிப் போய்விட்டான். பளீரென்று வெள்ளை வெயில் அடித்தது. அம்மா என்னையும் அழைத்துக் கொண்டு ஆசிரியரது
அறைக்குச் சென்று என் மன வருத்தத்தை விளக்கிக் கூறி என்னை வேறு பள்ளிக்கு மாற்றி விடலாமா என்று தான் யோசிப்பதாகச் சொன்னார். “மிஸிஸ்.வோங் எந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போனாலும் இந்தப் பிரச்சனை வரும் தானே. கவலையை விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்”, என்று சொன்னதை கேட்டுக் கொண்டு அம்மாவும் யோசித்தவாறு பேசாமல் நின்றார். அவரது நெற்றியில் முத்துமுத்தாய் வியர்வை துளிர்த்திருந்தது. சிலநிமிடங்களுக்குப் பிறகு, அம்மா விடைபெற்றுச் சென்றுவிட்டார்.
ஆசிரியர் வகுப்பில் குண்டனை மன்னிப்புக் கேட்கச் சொன்னார். அவன்
சார்பில் எல்லா மாணவர்களையும் என்னிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னார். வகுப்பறையில் மாணவர்கள் அனைவரும் குனிந்து மன்னிப்புக் கேட்டனர். ஆனால், அவன் மட்டும் மன்னிப்பு என்ற சொல்லை உச்சரிக்கவேயில்லை என்பதை நான் கவனித்தேன். இறுதி வரை அவனது தலை லேசாகக் குனியக் கூட இல்லை. சிலதடவை சொல்லி அலுத்துப் போன ஆசிரியரும் அடுத்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டார். நடந்திருக்கக் கூடியதை கணித்திருந்ததாலோ என்னவோ அம்மா அது குறித்து என்னிடம் இன்று மாலை எதுவுமே கேட்கவில்லை. ஒரேயொரு பார்வையை என் மீது வீசிவிட்டுத் தன் சமையல் வேலையைக் கவனிக்கப் போய்விட்டார்.
7 மே 1997 - புதன்
உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்த இந்த ஒன்றரை வருடமாக என் நெருங்கிய
தோழிகளுள் ஒருத்தி என்று பென்ச்சூவை மிக நம்பிக் கொண்டிருந்தேன். அவள் மட்டுமில்லாமல் எல்லா மாணவிகளுமே ஒரு வாரமாக என்னைக் கண்டாலே விலகி விலகிச் செல்கின்றனர். ஏன், நான் என்ன செய்தேன்? என்ற கேள்வி எனக்குள் விடை கிடைக்காது சுற்றிச் சுழன்றது.
போன புதனன்று இடைவேளையின் போது, சீரான லயத்துடன் பெய்து கொண்டிருந்த மழையை வேடிக்கை பார்த்தபடி தோழிகள் எல்லோரும் சாதாரணமாகத் தான் முதலில் பேசிக் கொண்டிருந்தோம். தற்செயலாக என் குடும்பப் பின்னணி மற்றும் என் பெற்றோரது கலப்பு மணம் போன்றவற்றைப் பற்றிய பேச்செழுந்தது.
முதன்முறையாகக் கேட்டறிந்த செய்து எல்லோரையும் வியப்பிலாழ்த்திருந்தது.
பென்ச்சூவின் முகம் சட்டென்று இருண்டு விட்டது. அடுத்த நாள் காலையில் எப்போதும் போல நான் அவளை நெருங்கியதுமே, "உனது முன்னோர்கள் என்னுடைய முன்னோர்களைக் கொன்றனர். உன்னுடைய பென்ஸில், பேனா எல்லாமே ஜப்பானில் தயாரானது. நீயோ அரை ஜப்பானியப் பெண். நான் ஏன் உன்னுடன் சிநேகமாக இருக்க வேண்டும்? இனி நாங்கள் உன்னோடு சேர மாட்டோம்", என்றாள் அவள். மிகவும் காட்டமாகவும் ஆவேசமாகவும். அப்படியெல்லாம் பேசுவாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியும் வருத்தமும் தொண்டையை அடைக்க வெறுமன நின்றேன்.கடந்த சில நாட்களாக ரகசியமாக அழுது வருகிறேன்.
அம்மாவிடம் சொல்லி அழுவதில் ஒரு பலனுமிருப்பதில்லை இப்போதெல்லாம்.
“என்றைக்கு நீ இதையெல்லாம் கடந்து மனோதிடம் கொண்டு பெரியவளாகப் போகிறாய் யூகா?, என்று அம்மா என்னைத் தான் திட்டுகிறார். சென்ற வருடம் ஒருமுறை,"அப்பாவுக்கு சிங்கப்பூரில் வேலை இல்லாவிட்டால் நாம ஜப்பானுக்கே போய் விடலாம், இல்லையா அம்மா?”, என்று நான் கேட்ட போது அம்மா ஒன்றுமே பேசாமலிருந்தார். நான் மறுபடியும் விடாமல் கேட்டபோது, “அங்கு மட்டும் எல்லாமே சுமூகமா இருக்கும் என்று நினைக்கிறாயா? நீ சீனத்தி என்று கேலி பேசத் தான் செய்வார்கள். யூகா, இதெல்லாம் நம் கையில தான் இருக்கிறதென்று இன்னுமா உனக்குப் புரியவில்லை?”,என்றார் லேசான அலுப்புடன். அம்மா சொல்வதைப் பார்த்தால் கலப்பில் பிறந்த என்னுடைய பிறப்பில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால், வெளியிலும் பள்ளியிலும் நான் ஏதோ ஒரு விசித்திரப் பிறவி போலவும் குற்றவாளி போலவும் தானே பார்க்கப்
படுகிறேன்.
12 பிப்ருவரி 2001 - திங்கள்
இன்றைக்கு அத்தனை சுவாரசியமான சம்பவம் ஒன்று நடக்குமென்று காலையில் நான் கண்டிப்பாக எண்ணிப் பார்த்திருக்கவே மாட்டேன். அவளை முதலில் பார்த்தபோது எங்கோ பார்த்த முகமென்று மட்டும் தோன்றியது. அந்தச் சிரிப்பும் தலையசைப்பும் கூட பரிச்சயமானதாகவே தெரிந்தது. ஆனால், யாரென்று தான் பிடிகிடைக்கவில்லை. சில நிமிடங்களிலே மூளைக்குள் பளிச்சென்றது. ஆ,பென்ச்சூ! உயரமாகி இருந்தாள். நான் குழம்பியதைப் போல அவள் குழம்பவில்லை. மிடுக்குடன் மிகத் தீர்மானமாக அருகில் வந்து சுட்டுவிரலை நீட்டி, "யூகா?", என்று கேட்டாள். ஆமென்று தலையாட்டினேன். நான் குலுக்கவென்று தன் வலக்கையை நீட்டியவள், "ஏய்,.. நான் பென்ச்சூ", என்று சொல்லிக் கொண்டாள்.
நாங்கள் இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு இன்றைக்கு தான் சந்தித்துக் கொண்டோம். பென்ச்சூ உயர்நிலை மூன்று மற்றும் நான்கை வேறொரு பள்ளியில் படித்துவிட்டு யீஷுன் தொடக்கக் கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தாள்.
வெவ்வேறு பாடங்கள் எடுத்திருந்ததால் அவள் வேறு வகுப்பிலும் நான் வேறு
வகுப்பிலுமிருந்தோம்.
மதியம் இடைவெளியின் போது மீண்டும் என்னைத் தேடி வந்து நிறைய பேசுவாள் என்றே நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. முன்பை விட லொடலொடவென்று அதிகமாகப் பேசினாள். உயர்நிலைப்பள்ளியில் நடந்த அந்தச் சம்பவத்தையும் மேலும் சிலவற்றையும் தனக்கே நினைவு படுத்திக் கொள்வதைப் போலப் பேசியவள், "எப்படி நான் உன்னிடம் அப்படியெல்லாம் நடந்து கொண்டேன், பேசினேன் என்றே எனக்குப் புரியவில்லை", என்று லேசாக வருந்தினாள். மிக அண்மையில் நடந்து
முடிந்த விஷயத்தைக் குறித்துப் பேசுவதைப் போல அவள் முகம் கொஞ்சம் தீவிர பாவம் கொண்டது எனக்கு சற்று வேடிக்கையாகக் கூட இருந்தது. அவள் முகமும் உணர்ச்சி பாவங்களும் முன்பு போலவே இருந்தன.
நான் ஜப்பானியப் பெண் என்பதால் கல்லூரியில் சில நண்பர்கள் என்னைக் கண்டு பொறாமைப் படுகின்றனர் என்று பென்ச்சூ என்னிடம் சொன்ன போது எப்படி அதை அறியத் தவறினேன் என்று லேசான ஆச்சரியம் தான் என்னில் ஏற்பட்டது. தொடர்ந்து ஜப்பானிய நாகரீகம் தான் இன்றைய தேதியில் ஆக அதிகப் பிரபலமாக இருந்து வருகிறது என்பது அவர்களது எண்ணம் என்றாள் குரலில் ஒரு
உறுதியுடன். அப்படியானதொரு கருத்து தான் அதிக பிரபலமாகி இருக்கிறது என்பது தான் என் எண்ணம் என்று சொல்லத் தோன்றினாலும் நான் எப்போதும் போல அப்போதும் ஒன்றும் சொல்லவில்லை. ஒரே இனத்தின் மேல் இரு துருவச் சிந்தனைகளைக் கண்டு வியந்து போகிறேன்.
“ஆனால், வெறுப்பு என்னவோ இன்னும் இருக்கத் தானே இருக்கிறது. அதுவும்
குறிப்பாக ஜப்பானிய ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட நாடுகளில்,.. போன
வருடம் பள்ளியில் கொரியாவுக்கு கல்விச் சுற்றுலா கூட்டிக் கொண்டு
போனார்கள். ஆனால், என்னை அனுப்ப என் அம்மா கடைசி வரை ஒத்துக் கொள்ளவே இல்லை", என்று நான் சொன்னதைக் கேட்டு பென்ச்சூவுக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை போலும். சில நொடிகளுக்கு என்னைக் கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள். மாலையில் அதே விஷயங்கள் குறித்து அப்பாவுடன் நான் நிறைய பேசி விவாதித்தேன். அவரும் என் மனதைப் பிரதிபலிப்பவராகவே உரையாடினார்.
உலகப்போர் காலங்களில் இன்னல்கள் அனுபவித்தவர்களுக்காக நான் மிகவும்
வருந்துகிறேன். இன்றைக்கும் ஜப்பானியரை வெறுக்கும் சிலருக்காகவும் கூட. ஏனெனில், அந்தச் செயல்கள் எல்லாமே கொடூரங்கள் நிறைந்தவை என்பதில் யாதொரு ஐயமுமில்லை. அவை அவர்களையெல்லாம் மன்னிக்க முடியாத கசப்பில் தள்ளிவிட்டிருந்தன. அவர்கள் அனுபவித்த இன்னல்களை நம்மில் யாருக்கும் முழுக்க புரிந்து கொள்ள முடியாது. ஆனால், அன்றைய காலகட்டத்தில் ஜப்பானியர்களும் துன்பங்களை அனுபவித்தார்கள் என்பது அவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
அணுகுண்டு போடப்பட்டதால் பெரியளவில் பாதிக்கப்பட்ட ஜப்பான் அதிலிருந்து மீண்டுவர எத்தனை கஷ்டங்கள் பட்டிருக்கும்? நாட்டுப் பற்றும் கர்வமும் சிறுவயது முதலே மூளைச்சலவை செய்வது போலப் புகட்டப்பட்ட ஜப்பானியர்களுக்கும் நாட்டுக்காக உயிரைவிடத் தயாரான
காமிக்காஜேக்களுக்கும் அந்தவித மனோதிடம் வேறு எப்படி வந்திருக்க
முடியும்? யாரேனும் இராணுவத்தில் பணியாற்ற வெறுப்பு காட்டினால், அவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்றே கணிக்கப் பட்டனர். வீட்டையும்
குடும்பத்தையும் விட்டு விலக வேண்டியிருந்தாலும், அந்நாளில் அவர்களுக்கு நாடு தான் முதல் பட்சமாகிப் போயிருந்தது. அவ்வாறான எண்ணங்களே சிறு வயது முதல் அவர்கள் மனங்களில் ஏற்றப்பட்டு வந்தன. போர்க்காலங்களில் பல்வேறு விதமான குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதற்கு இன்றைய தலைமுறையை எப்படி பொறுப்பாக முடியும்? முன்னோர்கள் செய்த அட்டூழியங்களை மறக்கவோ மன்னிக்கவோ அவர்களால் முடியாது போகலாம். குறைந்த
பட்சம், இளைய தலைமுறையைச் சேர்ந்த ஜப்பானியரை முன்னோர்களின்
பின்னணியில் பார்க்காமல் அவர்களுக்காக மட்டும் மதிக்கலாமில்லையா.
என்றைக்கு மறந்து மன்னிக்கும் இந்த கீழை உலகம் ஜப்பானியரின் போர்க்
குற்றங்களை? வரலாறு விரோதத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளது என்பதல்லவோ நிதர்சனமாக இருந்து வருகிறது.
28 ஆகஸ்ட் 2003 - வியாழன்
பல்கலைக்கழக வளாகம் தனியானதோர் உலகம். எங்கெங்கு பார்த்தாலும் துடிப்பான இளையர்கள். உணவகங்களிலோ கேட்கவே வேண்டாம். பல்லினச் சூழலில் பொதுவாக காணக்கூடியதும் சிலவுண்டு. இப்போதெல்லாம் உணவகங்களிலும் புத்தகக் கடைகளிலும் கையில் ஜப்பானிய மொழி நூல்களுடன் நிறைய இளையர்களைக் காண முடிகிறது. ஈர்ப்புடனும் ஈடுபாட்டுடனும் மொழியைக் கற்றுக் கொண்டு நிறைய வாசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் சீனர்கள். அவர்கள் வாசிப்பது ஒன்றும் படம் பார்த்து கதையை அறிந்து கொண்டு ரசிக்கக் கூடிய வெறும் சித்திரக்கதைகள் இல்லை. அவர்கள் வாசிப்பதெல்லாம் சிறந்த புனைவுகளும் ஜப்பானைப் பற்றிய அபுனைவுகளும். பார்க்கப் பார்க்க எனக்குள் ஆச்சரியமும் பெருமிதமும் ஏற்படுகிறது. அம்மா எனக்குக் கற்பித்திருப்பதை விட அதிகமாக இவர்களுக்குத் தெரியும் போலும். என்னால் ஆங்கிலம், சீனம், ஜப்பானிய மொழிகளில் பேசமுடியும் என்பதொன்றும் பெரிய விஷயமல்ல. நான் பிறந்து வளர்ந்த சூழல் அத்தகையது. ஆங்கிலமோ பொதுமொழி. ஆனால், இவ்விளைஞர்கள் வேறொரு மொழியின் பால் ஈர்க்கபட்டு இந்த அளவுக்கு மொழியில் தேர்ச்சியடைவதென்பது தான் மிகவும் பாராட்டத்தக்கதென்று எனக்குத் தோன்றுகிறது.
யூகா வோங் என்ற என் பெயரைப் போலவே சீனப்பெயரும் ஜப்பானிய முதல் பெயரும் சேர்ந்தழைக்கப்படும் சிலரும் ஆங்காங்கே இருக்கத் தான் இருக்கிறார்கள். சீனப் பெயரை மறந்து விடவும் ஜப்பானியராக அறியப் படவுமே இவர்கள் எல்லோரும் விரும்புகின்றனர். பெற்றோரே கூட அவர்களின் இந்த மனநிலைக்கு முதல் காரணம். வெளிநாட்டில் வேலையில் இருக்கும் தந்தை அவ்வப்போது வந்து போக, ஜப்பானியத் தாயால் வளர்க்கப்பட்ட எனது வகுப்பு நண்பர் ஒருவருக்கு தன்னை சிங்கப்பூரராக எண்ணிப் பார்க்கத் தோன்றுவதில்லை. அப்படியென்றால், சிங்கப்பூரர் என்ற அடையாளம் தான் என்னவாகும்? அது என்னவானாலும் அவருக்கு அதில் பெரிய இழப்பில்லை போலும். ஏனெனில், அவருக்குள் இருந்திருக்க வேண்டிய சிங்கப்பூரர் என்ற அடையாளம் ஏற்கனவே முற்றிலும் காணாமல் போய்விட்டிருக்கிறது. தன்னை முழு ஜப்பானியராக நினைத்துக் கொள்ளும் ஆர்வமுடைய இந்த நண்பருக்கு சீக்கிரமே ஜப்பான் நாட்டுக்குப் போகும் திட்டமிருக்கிறது. இருப்பினும், ஜப்பான் பற்றிய பரந்த அறிவோ, அங்கே வாழ்வது குறித்த புரிதலோ கொஞ்சங்கூட இருப்பதாகவே தெரியவில்லை. அந்நாட்டில் ஒன்றி வாழ்வதொன்றும் எளிதல்ல என்பது தான் உண்மை.
அம்மாவிடம் ஜப்பானிய மொழி கற்கவென்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக பன்மடங்கு அதிகரித்துள்ளது. சிறார்கள் முதல் முதியவர் வரை ஏராளமானோர் கற்றுக்கொள்ளப் பிரியப்படுகிறார்கள். அம்மா மிக ஆனந்தமாகத் தன் மொழியைக் கற்பித்துக் கொண்டிருக்கும் வேளையில் எனக்கு மட்டும் சிறுவயதில் புறக்கணிப்புக்கள் மூலம் உள்ளூர ஏற்பட்டிருந்த வடு முற்றிலும் மறையாமல் அவ்வப்போது வலித்தது. எப்போது மறையும் என்ற எதிர்பார்ப்பு என்னில் வலுக்கிறது.
19 ஜூலை 2009 - ஞாயிறு
அப்பாவுடன் பணியாற்றும் டெரிக் என்பவருடைய மகளுக்குத் திருமணம்
நடந்தேறியது. க்ளோரியா பல்கலையில் என்னுடன் படித்தவள் என்ற முறையில்
எனக்கும் நல்ல தோழி. ஆகவே, இன்றைக்குக் காலையில் மூவரும் கிளம்பி தேவாலயத்துக்குப் போனோம். மணமக்கள் இருவரும் புதிதாகச் செய்ததுபோல பளிச்சென்றிருந்தார்கள். திருமணச் சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகுஅங்கிருந்து எல்லா விருந்தினரும் அவரவர் வாகனங்களில் பெரிய உணவகத்தில் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்குச் சென்றோம். உடன் இணையில்லாமல் வந்திருந்த மூன்று நடுத்தர வயதுப் பெண்கள் எங்கள் மேசையில் அமர்த்தப்பட்டிருந்தனர். மூவருமே உயர்ரக ஆடையணிகலன்களுடன் இருந்தனர்.
பசிக்கிடையிலும் அவர்களுக்கு வம்புகளும் வேண்டித்தான் இருந்தது.
ஒலிப்பெருக்கியில் ஒலித்த இசை காதுகளில் மிக இதமாக விழுந்தது
ஒருவகையில் பேசுவதற்கு இசைவாகிப் போனது. லேசாகச் சிரித்து, பின்னர் எளிய அறிமுகங்கள் முடிந்தன. "ம், டெரிக் உங்களைப் பற்றியெல்லாம் ஒருமுறை சொன்ன நினைவிருக்கிறது", என்றார் மூவரில் ஆக இளமையாகத் தெரிந்தவர். திருமண வைபவத்திற்கு தாம் கொடுத்த ஆலோசனைகள் மற்றும் உதவிகள் குறித்து மூவரும் பேச ஆரம்பித்தனர். தவிர்க்க முடியாததால் எங்களுக்குத் தேவையோ சம்மந்தமோ இல்லாத தகவல்களைக் கேட்க
வேண்டியதிருந்தது.
திடீரென்று, மூவரில் மூத்தவராகத் தெரிந்தவர் அம்மாவைப் பார்த்து,
"நீங்கள் எப்படி சீனரைக் கட்டிக் கொண்டீர்கள்?", என்று மாண்டரின்
மொழியில் கேட்டனர். அதுவரை பேசாதிருந்த மூன்றாவது பெண், “என்ன நீங்கள்? ,... அதை அப்படிக் கேட்கக் கூடாது. திரு. வோங் உங்களை எப்படி திருமணம் செய்து கொண்டார் என்று கேட்க வேண்டும்", என்றார். அவர் குரலில்
கலந்திருந்த லேசான நக்கல் யாருக்கும் புரியக் கூடியதாகத் தான் இருந்தது.
காதல் திருமணம் என்றும் தோக்கியோவில் அப்பா படிக்கும் போது நட்பாகி மூன்றாண்டுகளுக்குப் பிறகு மணமானதென்று அம்மா சொன்னார். "அங்கேயே பண்ணிக் கொண்டீர்களா? இல்லை, இங்கே வந்த பிறகா?", என்று முதலில் பேசிய பெண் கேட்டார். அதற்கும் சாதாரணமாக பதில் சொல்லிக் கொண்டே வந்த அம்மா, சற்றும் எதிர்பாராத அடுத்த கேள்வியால் மிகவும் பாதிக்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். அதுவும் இருபத்தைந்தாண்டு கால மணவாழ்வில் பலமுறை எதிர்கொண்ட தன் அனுபவத்திற்குப் பிறகும். "உங்கள் தாத்தா இராணுவத்தில் இருந்தாராமே, அவர் எத்தனை சீனர்களைக் கொன்றிருக்கிறார்?", என்று கேட்டதும் அம்மாவின் முகத்தில் இருந்த இளநகை சடாரென்று மறைந்து போனது.
வலப்புறம் திரும்பி அப்பாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த அம்மாவின் மௌனத்தைப் புரிந்து கொண்டு மேலும் ஏதும் கேட்டுத் துளைக்காமல் விட்டார்களே என்று நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.அப்படியே விடாதிருந்தால், பொது இடத்தில் அம்மா அழுவதோ அப்பா கோபப்படுவதோ நடந்திருக்குமென்பதை நினைத்தாலே எனக்கு மிகவும் அச்சமேற்படுகிறது.
முன்பொரு முறை நான் அம்மாவிடம் அதே விஷயம் குறித்துக் கேட்டதுண்டு.
"மறைந்த என் தாத்தா இராணுவத்தில் மிக உயர்பதவியில் இருந்திருக்கிறார்.
போர்க் காலங்களில் தான் செய்த எதையுமே எங்களிடம் அவர் பேசியதில்லை. அவையெல்லாமே நினைவு கொள்ளத் தக்கவையல்ல என்பதே காரணமாக இருக்க வேண்டும். நினைத்தாலே வருத்தம் தரக் கூடியவை. தாத்தாவைப் போல மேலும் சிலர் குடும்பத்தில் இராணுவத்தில் பணியாற்றியதனால் அவர்களது மனைவி மக்கள் பட்ட துயரங்களும் மிக மிக அதிகம் என்பதே உண்மை. இங்கே வந்து வாழ ஆரம்பித்த பிறகு சிலபல அனுபவங்கள் ஏற்பட்டன எனக்கும் இன வேறுபாட்டு அடிப்படையில்", என்று நிறைய சொன்னதுண்டு அம்மா.
சில ஆண்டுகளுக்கு முன்பு கூட, அணுகுண்டு தான் போரை நிறுத்த ஒரே வழியாக இருந்ததென்று மனதிலிருந்ததைச் சொல்லிவிட்டு ஒரு ஜப்பானிய அமைச்சர் நெருக்கடி காரணமாக பதவி விலகினார். கொய்ஸோமியின் யசூகுனி ஆலயப்பிரவேசம் தொடர்ந்து வெறுப்பைச் சம்பாதித்து வருகிறது. ஜப்பானின் வரலாற்றுப் புத்தகத்தின் உள்ளடக்கம் இன்னொரு புறம் அழுத்ததை மேலும் அதிகமாக்குகிறது.
நானும் ஒரு ஜப்பானியர் தான் இருப்பினும், என்னைப்போல ஏராளமான இளம்
ஜப்பானியர்களும் முறையான மன்னிப்பு கேட்டு இதை முடித்துவிட வேண்டுமென்றே நான் கருதுகிறோம். ஆனால், இவ்வாறான கருத்தை ஜப்பானிய அரசாங்கம் ஏற்றுக்
கொள்வதேயில்லை.
(முற்றும்)