Text Widget

Sunday, January 31, 2010

அநங்கம்: புத்திமதிகளை மட்டும் உற்பத்திக்கும் ஆற்றலா இலக்கியம் என்பது?-கே.பாலமுருகன்

அநங்கம் ஆறாவது இதழைச் சிறுகதை சிறப்பிதழாகக் கொண்டு வர வேண்டிய முயற்சியில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டதற்காக வருந்துகிறேன். மேலும் அநங்கம் மலேசிய தீவிர இலக்கிய இதழை இணைய மாத இதழாகக் கொண்டு வர வேண்டும் என்கிற முயற்சியிலும் ஈடுப்பட்டிருந்ததால் காலம் வரையறையின்றி என்னிடமிருந்து இடறியிருந்தன.

இந்தத் தடவை அநங்கம் சிறுகதை இதழுக்காக மொத்தம் 15 கதைகள் சீக்கிரமாகவும், மிகவும் தாமதமாகவும் வந்து சேர்ந்திருப்பது எப்படியிருப்பினும் தீவிர சிற்றேடுகளின் மீதான ஆர்வத்தையும் பங்களிப்புகளையும் காட்டுகிறது. ஆயினும் சில கதைகளை அடுத்த இதழுக்காகத் தவிர்க்க வேண்டியதாகப் போயிற்று.

சிற்றிதழ் வட்டத்தால் எந்தப் போதனைகளையும் எந்த அறங்களையும் எந்தப் பிரச்சாரங்களையும் வழங்க இயலாததால் பெரும்பான்மை சக்தி படைத்தவர்கள் சிற்றிதழ்களின் மீது தங்களின் வணிக மதிப்பீடுகளைக் கடக்க முடியாத போதாமைகளின் மூலம் விமர்சிக்க முயல்வது வேடிக்கையாக இருக்கின்றது. போதனைகளுக்கும் அறிவுரைகளுக்கும் கொஞ்சமும் வரட்சியில்லாத நமது சமூக சூழலில் இலக்கியத்தின் மொத்த ஆற்றலையும் பிறருக்கு அறமும் அறிவுரையும் மட்டுமே போதிக்கக்கூடிய விற்பனைக்காக விரயப்படுத்துவது இன்னமும்

இலக்கியத்திலிருந்து மீளாத வடிவமாக நிலைத்துவிட்டுருப்பதோடு இதுதான் இலக்கியம் என்கிற அங்கீகாரத்தையும் முன்வைப்பது இலக்கியத்தின் மீதான பரிணமிக்க முயலாத தேக்கத்தையே குறிக்கிறது.

காலப்போக்கில் இந்தத் தேக்கம் ஏற்படுத்த போகும் விளைவுகள் ஆபத்தானவை. இலக்கியத்தைக் கொண்டு குற்றங்களுக்கான பாரம்பரியமான புத்திமதிகளை உற்பத்தி செய்வதோடு ஒரு படைப்பாளியின் கடமை முடிவடைகிறது என்கிற புரிதல் நம் நிலப்பரப்பின் இலக்கிய ஆற்றலை ஒர் அறம் போதிக்கும் விற்பனை பொருளாக மட்டுமே காட்சிக்கு வைக்கப்போகும் நிலைமையும் எதிர்காலத்தில் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போதைய படைப்புகளைப் பின்நவீனத்துவம், நவீனத்துவம் என்று வகைப்படுத்தி அதன் மீது புறக்கணிப்பைச் செலுத்தும் சிலர் அதற்கு அப்பாற்பட்ட இலக்கிய வகைகள் பற்றி கவலையில்லாமல், மரபின் நீட்சியில் படைப்பிலக்கியம் அடைந்திருக்கும் அடுத்தக்கட்ட உலக வளர்ச்சியைப் பற்றி அக்கறையில்லாமல் தீவிர இலக்கியத்தைப் பற்றி பரிச்சயமும் இல்லாமல் தமிழறிவைப் பெருமையுடன் பிதற்றிக் கொள்ளும் மேடைவாதிகளாக மட்டுமே சமூகத்தில் மாலை மரியாதைகளுடனும் சிறந்த அங்கீகார சக்திகளாகவும் உலாவருகிறார்கள்.
சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், இதனையடுத்து சமூகக் குற்றங்களை அடையாளம் காட்ட முனைந்தது போதனை இலக்கியம் ஆகும். மு.வ போன்ற சீர்த்திருத்த எழுத்தாளர்களின் ஆளுமைகளுடன் இலக்கியம் இயங்கிய காலக்கட்டத்தில் சிந்தனை புரட்சி மங்கியிருந்த காலக்கட்டத்தில் சமூகத்தை அறத்தின் வழி கட்டமைக்கும் போதனை இலக்கியம் வடிவத்தில் உருவான சிந்தனைகள் வரவேற்க்கப்பட்டன.

அவரைப் பின் தொடர்ந்து அதே வடிவத்தைக் கையாளும் இலக்கிய ஆற்றல் பலரால் கையாளப்பட்டன. மு.வ-வின் எழுத்துக் காலம் முடிவடைந்தும் இன்னமும் கொஞ்சம்கூட அவர் உருவாக்கிய இலக்கிய பாணியை வளர்த்துவிடாமல் அதே பாணியைத் தக்கவைத்துக் கொண்டு எழுதி வருவது மலேசிய இலக்கிய ஆற்றலை ஒரு பின்னடைவிற்குள் முடக்கிவிடும் கடும் செயல் என்றே சொல்ல முடிகிறது.

தற்பொழுது அதிகமாக எழுதி குவிக்கும் ரமணிசந்திரன் போன்ற மெகா தொடர் எழுத்துக்குரிய வகைகளை எப்படி அணுக முடிகிறதோ அதே போலத்தான் வெறும் போதனைகளை இலக்கிய வடிவத்தில் அளித்து இன்னமும் சீர்த்திருத்த பள்ளிகளைப் போன்று இலக்கியத்தின் மீது ஆக்கிரமிப்பைச் செலுத்தி வரும் கும்பலின் அதிகரிப்பு உலக இலக்கிய வளர்ச்சியின் முன் மலேசிய இலக்கியம் அடையாளம் காணப்படாமல் காணாமல் போகக்கூடும் அபாயமும் உண்டு என்கிற வகையில் அணுக முடிகிறது.

சமூகத்தில் நிகழும் குற்றங்களையும் குற்றவாளிகளையும் அடையாளங்கண்டு அவர்களுக்குப் போதனைகளை உற்பத்திக்கும் ஆற்றலை இலக்கியம் எனக் கொண்டாடும் சிந்தனை மாறி, குற்றங்களின் அடிவேருக்குச் சென்று அதனைப் புதிய மதிப்பீடுகளுடன் விவாதிக்கும் ஆற்றலே தரமான இலக்கியம் என்று அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

ம.அ.சந்திரன் அவர்களின் மௌளனம் இதழில் பிரசுரமான சிற்றிதழ்களின் மீதான விமர்சனம் நவீன தமிழ் படைப்பிலக்கியத்தின் முன்னெடுப்பைக் கேலி செய்யும் வகையில் அவை பற்றி ஆழமான விவாதங்களும் கலந்துரையாடல்களும் ஏதுமின்றி உடனடி நிராகரிப்பைக் காட்டி வன்முறையாகச் செயல்பட நினைப்பது படைப்பிலக்கியம் மீதான அக்கறையின்மையைக் காட்டினாலும், இவர்களின் அக்கறையும் கவனமும் இல்லாமலும்கூட மலேசியாவில் உருவாகியிருக்கும் இளம் படைப்பாளிகளின் புதிய முயற்சிகளையும் மாற்றுச் சிந்தனைகளான படைப்பிலக்கியத்தையும் மேலும் வணிக நோக்கமின்றி நடத்தப்படும் சிற்றிதழ்களையும் வளர்க்க முடியும் என்பது நிச்சயம். எவர் போடும் அங்கீகாரத்திற்காகவும் புகழுக்காகவும் கூட்டத்திற்காகவும் ஏங்கித் தவிக்கும் பலவீனம் இலக்கியத்தை மட்டும் முன்னெடுக்கும் சிற்றிதழ்களுக்குக் கிடையாது.

-இதழாசிரியர் கே.பாலமுருகன் -

துறைமுகம் நாவல் விமர்சனம்- அ.விக்னேஸ்வரன்

இறை என பெயரிட்டு, அதை ஓர் உன்னத பொருளாக பார்க்கிறான் மனிதன். மனிதன் - இறை, இதற்கு மத்தியில் மதம். இறையை அடைய மதம் முக்கியமானது தானா? தனக்கு மதம் வேண்டும் என்பது இறையின் விருப்பமா? இறைக்கு மதம் வேண்டும் என்பது மனிதனின் விருப்பமா? மதம் என்று வந்துவிட்டாலே கேள்வி கேட்கக்கூடாது. அப்படிக் கேள்வி கேட்க ஆரம்பித்தால் அதற்கானத் தீர்வு எந்தக் காலத்திலும் கிடைத்துவிடாது என்பார்கள்.

மதம் எனும் போர்வையால் மனிதனுள் ஏற்படும் பிம்பங்கள் பல. வித விதமான புரிதல்கள். இதன் பிரள்வுகளே மூட நம்பிக்கைகள் என அறியப்படுகின்றன. படிப்பறிவு இல்லாத, மதம் எனும் புரிதலில் பயமும், தெளிவற்ற சிந்தனையும் கொண்ட கடலோர மக்களின் வாழ்வைச் சித்தரிக்கும் புதினமாய் அமைந்துள்ளது தோப்பில் முகமது மீரான் எழுதிய துறைமுகம் நாவல்.

குமரி மாவட்டத்தில், இந்திய தேசத்தின் சுதந்திரத்துக்கு முன் நடக்கும் சம்பவங்களைப் பிணைத்து கதைக்களம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய மற்றும் கிருஸ்த்துவ மக்களின் வாழ்வை நாம் கண் முன் நிறுத்துவதில் ஆசிரியரின் சிரத்தைச் சிறப்பாகவே இருக்கிறது. இதில் முக்கியமாக விவரிக்கப்பட்டுள்ளது இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையே. மதத்தை தன் வாழ்வியல் எல்லையாகப் பயன்படுத்தும் மக்கள். தமது நடவடிக்கைகள், மதத்தில் இருக்கிறதா இல்லையா என்ற தெளிவற்ற கோட்பாடுகளோடு இணைத்து தங்களை ஒடுக்கிக் கொள்கிறார்கள்.

பத்திரிக்கை படிக்கக்கூடாது, ஆண்கள் தலையில் முடி வைத்திருக்கக் கூடாது, ஆங்கிலம் பயிலக் கூடாது. இவற்றை செய்துவிட்டால் அது ஹராம் என தீர்மானித்து தம் மதத்தின் மீதான தீவிர பற்றோடு இருக்கிறார்கள். பாமர மக்களிடையே தவறான மத போதனையை வழங்கப்படுகிறது. மதத்தின் பெயரால் மக்களிடையே தவறான போதனைகளைத் திணிக்கப்படும் சம்பவங்கள் மத போதனையாளனின் கதாபாத்திரத்தோடு பேசப்படுகிறது. முகமது அலிகான் என்பவன் ஊருக்கு உயர்ந்தவனாகச் சித்தரிக்கப்படுகிறான். இவனது பிரள்வான சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டால் இஸ்லாமியர்கள் உலக ஒருமைப்பாட்டை பேச முடியாது. மதவெறி தூண்டுதலின் அடிப்படை கருவியாகவே அவனைக் காண முடிகிறது.

கடலை நம்பி வாழும் மக்களின் நிலைபாடு எத்தகைய நிலையில் இருந்தது என்பது நெருடலாக இருக்கிறது. திடீர் திருப்பங்கள் இல்லாமல் யதார்தமாகக் கதை நகர்கிறது. பைத்தியக்காரன் ஊரில் அறிவாளி முட்டாளான கதையாக, ஒரு குறுகிய வட்டத்திற்குள் தம்மை குறுக்கிக் கொண்ட மக்களின் மூட நம்பிக்கைக்கு எதிராக கேள்வியெழுப்புபவர்கள் அவ்வூர் மக்களுக்கு எதிரியாகிறார்கள்.

கதையில் வரும் மீரான் பிள்ளை சிறு வியாபாரி. மீன்களைக் கொழும்புக்கு அனுப்பி அவற்றில் கிடைக்கும் வரும்படியில் குடும்பத்தை நடத்துகிறார். கடலில் கிடைக்கும் மீன்களும் சரி, மீன்களின் விலை நிர்ணயமும் சரி இரண்டுமே அவருக்கு மரண பயத்தைக் கொடுக்கின்றன. மீன்கள் கிடைக்கும் காலத்தில் மார்கெட்டில் விலை இல்லை, மார்கெட்டில் மீன் கிராக்கி ஏறும் சமயம் மீன்கள் கிடைப்பதில்லை. இதில் பொய் புரட்டு என கஷ்ட ஜீவனம் நடத்தும் மக்கள். ஒரு கடிதம் வந்துவிட்டாலும் அதைப்
படிப்பதற்கு ஆள் தேடும் ஊர் மக்கள்.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது முதலாளி வர்க்கத்தின் பொருளாதார அரசியல். ஒரே சமயம், ஓர் ஊர் மக்கள், கடலை நம்பி வாழ்பவர்களாக இருந்தாலும் முதலாளிமார்களின் திருட்டுத்தனத்தை வெளிப்படையாக நாவலாசிரியர் சொல்கிறார். அதாவது பொருளியல் தேடலில் மதம் எல்லாம் ஒரு சால்ஜாப்பு சமாச்சாரம் என்பதே இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. ஈனா பீனா கூனா போன்ற முதலாளிகளின் துரோகத்தால் அக்கடற்கரை கிராமத்தின் பல மக்கள் கடன் சிக்கலிலும் வறுமையில் வாடுகிறார்கள்.

ஒருவனின் அறியாமையை இன்னொருவன் பயன்படுத்திக் கொள்வதைப் போன்ற மட்டகரமான செயல் இருக்க முடியாது. ஆண்கள் முடி வைத்திருந்தால் ஹராம் என்பதால் இன்று எந்தத் தலையை மொட்டை அடிக்கலாம் என சுற்றித் திரிகிறான் ஆனவிளுங்கி எனும் முடி வெட்டுபவன். இவனது கதாபாத்திரம் நகைச்சுவையினூடாகச் சொல்லப்படுகிறது. முடி சரைப்பதில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பது போன்ற பாவனையிலும், தன் சரைக்கும் கத்தியைப் போல் உலகத்தில் கிடையாது எனும் மிதப்பில் இருப்பவன். மதம் தனக்கு சாதகமாக ஒரு விடயத்தைக் கொடுப்பதால் அதை அவன் பவ்யமாக ஏற்றுக் கொள்கிறான்.

அரசியல், நாட்டுப்பற்று என அவர்களின் புரிதலுக்கு சிரமமானவை கூட ஹராம் என அடையாளப்படுத்தப்படுகிறது. இம்மாதிரியான அவலநிலைகளுக்கு எதிராக குரல் எழுப்பும், ஓராளவு படித்த இளைஞனானவன் விரோதியாகக் கருதப்படுகிறான். மீரான் பிள்ளையின் மகனான காசீமின் கதாபாத்திரம் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தமது சமூகத்தின் விழிப்புக்காக மாறுபட்ட வாழ்க்கையை வாழ்ந்துக்காட்ட முற்படும் இவன் செயல் எப்படி அமைகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. உடனடி மாற்றங்கள் எடுபடுமா என்பதையும் இங்கு நாம் காண வேண்டியுள்ளது.

நாவலின் எழுத்து நடை குறிப்பிட்ட மக்களின் மொழி வழக்கோடு அமைந்துள்ளது. தமிழ், மலையாளம், கொழும்பு, அரபு என கலவைகளைக் கொண்ட பேச்சு நடை வாசிப்புக்கு சிறு தடை என்றே சொல்லலாம். மேற்கோள் வார்த்தைகளைக் கொடுத்திருப்பினும் சரளமான வாசிப்புக்குத் தகுந்த ஒன்றாக அமைத்திருக்கவில்லை. சில விவரிப்புகள் ஜவ்வு போல் இழுப்படுவதும் அயற்சியைக் கொடுக்கிறது. நாவலின் இயல்பு தன்மைக்கு இவ்வகை எழுத்து நடை அவசியமாக அமைந்துள்ளதையும் மறுக்க இயலாது.

குறிப்பிட்டக் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறையைப் பதிவுப்படுத்தியதில் துறைமுக கப்பலின் பயணம் சிறப்பான ஒன்றே

என்னோடு உறங்கும் பூனை-இளைய அப்துல்லாஹ்

பாய்ந்து வந்து என்னோடுதான்
அது உறங்குகிறது.

எனது படுக்ககையில்
எனது அருகாமையில்
என்னை விட்டு அகலமாட்டேன் என்கிறது

பூனையின் முடிகள் சுகமானது
அதன் கழுத்தில் ஒரு தாலி கட்டி
அழகு பார்த்தேன்

பூனையின் தாலி என்னை குத்துகிறது
விலக மறுத்த பூனை
பல வருடங்களாக என்னோடேயே இருக்கிறது

எனக்கு வலிக்கிறது என்பது
பூனைக்கு தெரிகிறதாயினும்
என்னோடுதான் உறங்குகிறது தினம்

அடம் பிடித்து அப்புறபப்படுத்த
முடியாமைக்கு தாலி இருக்கிறது

ஒரு வேள்வி போலத்தான்
பூனைக்கும் எனக்குமான உறவு
அது எப்பொழுது மாறிப்போனது
என்று நினைவில் இல்லை

அழகிய பூனை அது
நிறைந்த மயிர் அதுக்கு
மயிரால் உராயும்
போதெல்லாம் சுகம்

அடங்க மறுக்கிறது பூனை
சில வேளைகளில் அது அத்து மீறுகிறது

ஆனாலும் பூனை
எங்குமே போக விடாத படிக்கு
என்னொடு உறங்குகிறது

கால்கள் பின்னிக்கிடக்கும்
போதெல்லாம் என் கால்களை
அது சொந்தமாக்குகிறது
பூனைக்கு எனது வலியில்
ஒரு சிரிப்பிருக்கிறது.

தினேசுவரி கவிதைகள்

உடல் மறந்த உயிர்கள்

பறவைப் போல்
பறக்க நினைத்து
மின்சார மரத்தில்
மாட்டிக் கொண்ட
பட்டம் நான்......

காகிதம் நான்
என அறிந்து
போகி மரப் புத்தர்
போல் காற்றோடு
அமைதி காத்தேன்...

பறவை மிஞ்சும்
சூறாவளி
நான் என
கதை பரப்பி விட்டார்கள்...

தலைக்கனம்
தலையில்
அமர்ந்ததும்
அமர்க்களப்பட்டேன்...

தலைக் கால்
புரியாமல்
முட்டி மோதினேன்...

காற்றோடு
போராட்டத்தில்
கழிக்கப்பட்டேன்...

காப்பாற்றுவதாகச்
சொல்லி
பலர் பிடித்து
இழுத்ததில்
வாலறுந்து
போனது...

மீதி கிடந்த
உடலில் அழுகிய
பிண வாடை...

உசுப்பி விட்டவன்
இன்னொரு
பட்டத்தோடு.......


கண்ணீரும் கற்களும்.....

இதோ
நான்
மூழ்கிக்
கொண்டிருக்கிறேன்...
மூச்சடைத்து
காதடைத்து
நெஞ்சடைத்தும்
போகிறது....

வாழ்ந்து வந்த
மண் நாசிவரை
மணக்கிறது...
இருந்தும்
கதற முடியாத
அவலனிலையில்....

இது கொலையல்ல....
தற்கொலையல்ல...
இயற்கை மரணமுமல்ல..
மரண தண்டனையுமல்ல....

மனிதர்களின்
இயலாமை....

எத்தனை முறை
நீர் நிலைகளின்
மடியில் மரண சாசனம்....

இன்று

நான்
உங்கள் இயலாமைக்குப்
பலியாகும்
கல்.....
வீசி எறியப்பட்டு
இதோ
மூழ்கிக்கொண்டிருக்கிறேன்.....

* * * * *

பா.சிவம் கவிதை : ஈழம்

இழந்தவற்றைப் பட்டியலிடும்போது
நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன
மேலும் சில இழப்புகள்…

ஒரு மனைவியை
கணவன் முன் சீரழிக்க…
ஒரு தங்கையை
அண்ணன் முன் தோலுரிக்க
அவர்களால்தான் முடிகிறது…

இழந்தவை என்பது
சில கற்களால் ஆன
வீடுகள் மட்டுமேயென்றால்
மண் துகள்களால் ஆன
நிலங்கள் மட்டுமேயென்றால்
கழற்றி வீசியெறியும்
உடமைகள் மட்டுமேயென்றால்

சொர்ப கனவுகளையும்
அர்ப சடலங்களையும்
குழி தோண்டி
புதைத்து விட்டு
திசை தொலைத்து
காணமல் போயிருக்கலாம்…
இழந்தவை என்பது
இதுதான் என
உணர்த்தவியலாத
உன்னதத்தைக் கடந்தபல்லாண்டுகால பேருண்மை
எனும்போது…

சொல்லற்று
செயலற்று
நாதியற்று
நடுத்தெருவில்
நாறிக்கொண்டிருக்கிறது
தமிழனின் பிணம்…

அதைவிட மகாகேவலம்
அழிப்பதற்காய் அவதரித்த
சிவன்களும்
அவர்தம் பிள்ளைகள்
விநாயகர்களும் – முருகர்களும்கூட
கண்காணா இடங்களில்
புதைக்கப்பட்டு அழிக்கப்படுகிறார்கள்…

சிரித்துக் கொண்டே
நிறுவப்படுகிறார்
இன்னொரு கடவுள்…

மனிதர்களைக் காப்பாற்ற
இயலாக் கடவுள்கள்
அழிக்கப்படும்போது
மனிதர்களால்
வேடிக்கை பார்க்க
மட்டுமே முடிகிறது…

கிரிங்கா என
கிளிநொச்சியும்
முல்லதூவ என
முல்லைத்தீவும்
கற்பழித்து கொல்லப்பட்ட பின்னரும்…

வாழ்க்கை
எதோவொரு திசையில்
நொண்டி நொண்டி
நகர்ந்துக்கொண்டுதானிருக்கிறது…

இனி இழப்பதற்கென்று
புதிதாக ஏதுமில்லை
மிச்சமீதி கடவுள்களைத்
தவிர…
* * * *

சரஸ் பினாங்கு கவிதைகள்

ரணம்

மனதின் கணங்கள்
ஆராயப்பட வேண்டாம்
அங்கே இருப்பது
ஆழமான சேதமும் வலிகளுமே

நட்பு

நான் சந்தித்தவர்களில்
பிரியாமல் இருப்பவள்
நீ மட்டும்தான்
நான் பிரிந்தவர்களில்
சந்திக்காமல் இருப்பவளும்
நீ மட்டும்தான்
நினைவு

மனதோடு இருக்கும்
மழைக்காலம்
இன்னமும் மீளாத
ஒரு வசந்தகாலத்துடன்
உள்ளம் எங்கும் இளமை
இதயம் முழுவதும்
பால்யத்தின் கால்தடங்கள்
கை முளைத்து கால் உதைத்து
சுவாசமிட்ட நினைவுகள்
ஊர்வலம் போகின்றன
இறந்தகாலத்தோடு கைக்கோர்த்து.