Text Widget

Tuesday, February 2, 2010

சிறுகதை: ஏந்தல்- மஹாத்மன்
http://anangam.blogspot.com/2010/02/blog-post_02.html
நேற்று பாடம் நடந்து கொண்டிருந்த போது குண்டன் முன்னிருக்கையிலிருந்து ஒருமுறை திரும்பி என்னைப் பார்த்தான். சின்னக் கண்களில் வலுவில் வரவழைத்துக் கொண்ட கோபம் கூர்மையாகத் தெரித்தது. இரண்டாவது முறை பார்த்த போது முணுமுணுப்பாய் என்னைக்



சிறுகதை: யூகா வோங்கின் நாளேட்டிலிருந்து சில பக்கங்கள்- ஜெயந்தி சங்கர்
http://anangam.blogspot.com/2010/02/blog-post.html
இன்னும் விடியாத பொழுது. மஞ்சளொலி வீச்சுள்ள சுரங்கப் பாதையில் இறங்கி நடக்கும்போது, மலாய் ஆடவர்கள் பலவிதமான குல்லாக்களிலும் தங்களுக்கேயுரிய இஸ்லாமிய கலாச்சார புத்தாடைகளோடும் சுகந்த வாசத்தோடும் மலர்ந்த முகத்தோடும் சென்றதைக் கண்டேன்.


புத்திமதிகளை உற்பத்திக்கும் ஆற்றலா இலக்கியம் என்பது?- கே.பாலமுருகன்
http://anangam.blogspot.com/2010/01/blog-post_8341.html
சிற்றிதழ் வட்டத்தால் எந்தப் போதனைகளையும் எந்த அறங்களையும் எந்தப் பிரச்சாரங்களையும் வழங்க இயலாததால் பெரும்பான்மை சக்தி படைத்தவர்கள் சிற்றிதழ்களின் மீது தங்களின் வணிக மதிப்பீடுகளைக் கடக்க முடியாத போதாமைகளின் மூலம் விமர்சிக்க- கே.பாலமுருகன்

யூகா வோங்கின் நாளேட்டிலிருந்து சில பக்கங்கள்- ஜெயந்தி சங்கர்

23 மார்ச் 1993 - செவ்வாய்

ஏற்கனவே நடத்தி முடித்திருந்த வரலாற்றுப் பாடத்தைத் திருப்பிப்
பார்க்கும் நோக்கில் நேற்றைக்கு திருமதி.மல்லிகா ஆரம்பித்த போதே வழக்கமான அந்த அசௌகரிய உணர்வு எனக்குள் வியாப்பித்தது. தொடக்க நிலை நான்காம் வகுப்பு தொடங்கிய பிறகு இந்த மூன்று மாதங்களில் சிங்கப்பூரில் ஜப்பானியராட்சி குறித்து ஆசிரியர் முன்பும் ஒரு முறை விரிவாகப்
பேசியிருக்கிறார். கூடுதல் தகவல்களாக ஜப்பானிய இராணுவ அதிகாரிகள்
சிங்கப்பூரில் அப்பாவி மக்களின் தலைகளைக் கொடூரமாகக் கொய்து விடுவதையும், வெட்டுண்ட தலையை எல்லோரும் பார்க்கும்படி சுவர் மீது மாட்டி வைத்திருந்ததையெல்லாம் சொல்லச் சொல்லச் சிறார்கள் பயமுழி முழிப்பர். பேயறைந்தது போல அமர்ந்திருக்கும் சிறுமிகளில் வெகு சிலர் தலையைத் திருப்பி என்னைப் பார்ப்பதா வேண்டாமா என்று குழம்புவது போலமர்ந்திருப்பர். இடைவேளையில் எல்லோரும் கூடியிருந்து அந்தக் கதைகளை மீண்டும் பேசும் போது பேசுவதைக் கேட்க வேண்டியிருந்ததை நான் மிக அஞ்சினேன். கேட்கக் கேட்க உள்ளூர என்னையே நான் வெறுக்க ஆரம்பித்தது போலுணர்ந்தேன்.

நேற்று பாடம் நடந்து கொண்டிருந்த போது குண்டன் முன்னிருக்கையிலிருந்து ஒருமுறை திரும்பி என்னைப் பார்த்தான். சின்னக் கண்களில் வலுவில் வரவழைத்துக் கொண்ட கோபம் கூர்மையாகத் தெரித்தது. இரண்டாவது முறை பார்த்த போது முணுமுணுப்பாய் என்னைக் 'கொலைகாரி' என்றழைத்தான். அவன் சீனத்தில் சொன்ன அந்த ஒற்றைச் சொல் ஆசிரியருக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை, மாணவர்களில் மிகச் சிலருக்கு மட்டும் கேட்டிருக்கலாம். என் கண்களில் கண்ணீர் சேர்வதை உணர்ந்த போது தைரியத்தை வரவழைத்துக் கொள்ள
நான் அம்மா சொன்னதைத் தான் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியதிருந்தது. ஆனாலும், கசிந்த கண்ணீர் கன்னத்தில் வழிவதை என்னால் தடுக்க முடியவில்லை.

பள்ளி விட்ட பிறகு பேருந்திலேறி வீட்டிற்குப் போனதும் அம்மாவைக் கண்ட கணத்தில் சடாரென்று உடைந்து முன்பைவிட மிக அதிகமாக அழுதேன். என்னைத் தேற்றத் தெரியாமல் அம்மா விழித்தார்.

பாலர் பள்ளி முதலே ஒரு சிலரின் ஜாடைமாடையான விமரிசனங்கள், நேரடியான கேலிகள், குத்தலான பேச்சுக்கள், இனம் தொடர்பான வசவுகள் என்று நிறைய கேட்டிருந்தேன். பாதிக்கு மேல் அப்போது புரிந்ததில்லை. குறிப்பாக ஓர் ஆசிரியர் என்னை நடத்திய விதம் ஏனென்று விளங்காமலே இருந்து வந்தது. அவற்றுக்கெல்லாம் விடையாகக் கிடைத்தது தொடக்கப்பள்ளியின் வரலாற்றுப்பாடம். குறிப்பாக, சுவாரஸியம் சேர்க்கவென்று புனையப்பட்டது போலத் தோன்றும் ஆசிரியரின் மேலதிக தகவல்கள்.

இன்றைக்கு அம்மா என்னுடன் பள்ளிக்கு வந்து குண்டனை என்னிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். அவன் மிகவும் அலட்சியப் பார்வை ஒன்றைப் பார்த்துக் கொண்டே அவ்விடத்தை விட்டு விலகிப் போய்விட்டான். பளீரென்று வெள்ளை வெயில் அடித்தது. அம்மா என்னையும் அழைத்துக் கொண்டு ஆசிரியரது
அறைக்குச் சென்று என் மன வருத்தத்தை விளக்கிக் கூறி என்னை வேறு பள்ளிக்கு மாற்றி விடலாமா என்று தான் யோசிப்பதாகச் சொன்னார். “மிஸிஸ்.வோங் எந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போனாலும் இந்தப் பிரச்சனை வரும் தானே. கவலையை விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்”, என்று சொன்னதை கேட்டுக் கொண்டு அம்மாவும் யோசித்தவாறு பேசாமல் நின்றார். அவரது நெற்றியில் முத்துமுத்தாய் வியர்வை துளிர்த்திருந்தது. சிலநிமிடங்களுக்குப் பிறகு, அம்மா விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

ஆசிரியர் வகுப்பில் குண்டனை மன்னிப்புக் கேட்கச் சொன்னார். அவன்
சார்பில் எல்லா மாணவர்களையும் என்னிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னார். வகுப்பறையில் மாணவர்கள் அனைவரும் குனிந்து மன்னிப்புக் கேட்டனர். ஆனால், அவன் மட்டும் மன்னிப்பு என்ற சொல்லை உச்சரிக்கவேயில்லை என்பதை நான் கவனித்தேன். இறுதி வரை அவனது தலை லேசாகக் குனியக் கூட இல்லை. சிலதடவை சொல்லி அலுத்துப் போன ஆசிரியரும் அடுத்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டார். நடந்திருக்கக் கூடியதை கணித்திருந்ததாலோ என்னவோ அம்மா அது குறித்து என்னிடம் இன்று மாலை எதுவுமே கேட்கவில்லை. ஒரேயொரு பார்வையை என் மீது வீசிவிட்டுத் தன் சமையல் வேலையைக் கவனிக்கப் போய்விட்டார்.

7 மே 1997 - புதன்

உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்த இந்த ஒன்றரை வருடமாக என் நெருங்கிய
தோழிகளுள் ஒருத்தி என்று பென்ச்சூவை மிக நம்பிக் கொண்டிருந்தேன். அவள் மட்டுமில்லாமல் எல்லா மாணவிகளுமே ஒரு வாரமாக என்னைக் கண்டாலே விலகி விலகிச் செல்கின்றனர். ஏன், நான் என்ன செய்தேன்? என்ற கேள்வி எனக்குள் விடை கிடைக்காது சுற்றிச் சுழன்றது.

போன புதனன்று இடைவேளையின் போது, சீரான லயத்துடன் பெய்து கொண்டிருந்த மழையை வேடிக்கை பார்த்தபடி தோழிகள் எல்லோரும் சாதாரணமாகத் தான் முதலில் பேசிக் கொண்டிருந்தோம். தற்செயலாக என் குடும்பப் பின்னணி மற்றும் என் பெற்றோரது கலப்பு மணம் போன்றவற்றைப் பற்றிய பேச்செழுந்தது.

முதன்முறையாகக் கேட்டறிந்த செய்து எல்லோரையும் வியப்பிலாழ்த்திருந்தது.
பென்ச்சூவின் முகம் சட்டென்று இருண்டு விட்டது. அடுத்த நாள் காலையில் எப்போதும் போல நான் அவளை நெருங்கியதுமே, "உனது முன்னோர்கள் என்னுடைய முன்னோர்களைக் கொன்றனர். உன்னுடைய பென்ஸில், பேனா எல்லாமே ஜப்பானில் தயாரானது. நீயோ அரை ஜப்பானியப் பெண். நான் ஏன் உன்னுடன் சிநேகமாக இருக்க வேண்டும்? இனி நாங்கள் உன்னோடு சேர மாட்டோம்", என்றாள் அவள். மிகவும் காட்டமாகவும் ஆவேசமாகவும். அப்படியெல்லாம் பேசுவாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியும் வருத்தமும் தொண்டையை அடைக்க வெறுமன நின்றேன்.கடந்த சில நாட்களாக ரகசியமாக அழுது வருகிறேன்.

அம்மாவிடம் சொல்லி அழுவதில் ஒரு பலனுமிருப்பதில்லை இப்போதெல்லாம்.
“என்றைக்கு நீ இதையெல்லாம் கடந்து மனோதிடம் கொண்டு பெரியவளாகப் போகிறாய் யூகா?, என்று அம்மா என்னைத் தான் திட்டுகிறார். சென்ற வருடம் ஒருமுறை,"அப்பாவுக்கு சிங்கப்பூரில் வேலை இல்லாவிட்டால் நாம ஜப்பானுக்கே போய் விடலாம், இல்லையா அம்மா?”, என்று நான் கேட்ட போது அம்மா ஒன்றுமே பேசாமலிருந்தார். நான் மறுபடியும் விடாமல் கேட்டபோது, “அங்கு மட்டும் எல்லாமே சுமூகமா இருக்கும் என்று நினைக்கிறாயா? நீ சீனத்தி என்று கேலி பேசத் தான் செய்வார்கள். யூகா, இதெல்லாம் நம் கையில தான் இருக்கிறதென்று இன்னுமா உனக்குப் புரியவில்லை?”,என்றார் லேசான அலுப்புடன். அம்மா சொல்வதைப் பார்த்தால் கலப்பில் பிறந்த என்னுடைய பிறப்பில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால், வெளியிலும் பள்ளியிலும் நான் ஏதோ ஒரு விசித்திரப் பிறவி போலவும் குற்றவாளி போலவும் தானே பார்க்கப்
படுகிறேன்.

12 பிப்ருவரி 2001 - திங்கள்

இன்றைக்கு அத்தனை சுவாரசியமான சம்பவம் ஒன்று நடக்குமென்று காலையில் நான் கண்டிப்பாக எண்ணிப் பார்த்திருக்கவே மாட்டேன். அவளை முதலில் பார்த்தபோது எங்கோ பார்த்த முகமென்று மட்டும் தோன்றியது. அந்தச் சிரிப்பும் தலையசைப்பும் கூட பரிச்சயமானதாகவே தெரிந்தது. ஆனால், யாரென்று தான் பிடிகிடைக்கவில்லை. சில நிமிடங்களிலே மூளைக்குள் பளிச்சென்றது. ஆ,பென்ச்சூ! உயரமாகி இருந்தாள். நான் குழம்பியதைப் போல அவள் குழம்பவில்லை. மிடுக்குடன் மிகத் தீர்மானமாக அருகில் வந்து சுட்டுவிரலை நீட்டி, "யூகா?", என்று கேட்டாள். ஆமென்று தலையாட்டினேன். நான் குலுக்கவென்று தன் வலக்கையை நீட்டியவள், "ஏய்,.. நான் பென்ச்சூ", என்று சொல்லிக் கொண்டாள்.

நாங்கள் இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு இன்றைக்கு தான் சந்தித்துக் கொண்டோம். பென்ச்சூ உயர்நிலை மூன்று மற்றும் நான்கை வேறொரு பள்ளியில் படித்துவிட்டு யீஷுன் தொடக்கக் கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தாள்.
வெவ்வேறு பாடங்கள் எடுத்திருந்ததால் அவள் வேறு வகுப்பிலும் நான் வேறு
வகுப்பிலுமிருந்தோம்.

மதியம் இடைவெளியின் போது மீண்டும் என்னைத் தேடி வந்து நிறைய பேசுவாள் என்றே நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. முன்பை விட லொடலொடவென்று அதிகமாகப் பேசினாள். உயர்நிலைப்பள்ளியில் நடந்த அந்தச் சம்பவத்தையும் மேலும் சிலவற்றையும் தனக்கே நினைவு படுத்திக் கொள்வதைப் போலப் பேசியவள், "எப்படி நான் உன்னிடம் அப்படியெல்லாம் நடந்து கொண்டேன், பேசினேன் என்றே எனக்குப் புரியவில்லை", என்று லேசாக வருந்தினாள். மிக அண்மையில் நடந்து
முடிந்த விஷயத்தைக் குறித்துப் பேசுவதைப் போல அவள் முகம் கொஞ்சம் தீவிர பாவம் கொண்டது எனக்கு சற்று வேடிக்கையாகக் கூட இருந்தது. அவள் முகமும் உணர்ச்சி பாவங்களும் முன்பு போலவே இருந்தன.

நான் ஜப்பானியப் பெண் என்பதால் கல்லூரியில் சில நண்பர்கள் என்னைக் கண்டு பொறாமைப் படுகின்றனர் என்று பென்ச்சூ என்னிடம் சொன்ன போது எப்படி அதை அறியத் தவறினேன் என்று லேசான ஆச்சரியம் தான் என்னில் ஏற்பட்டது. தொடர்ந்து ஜப்பானிய நாகரீகம் தான் இன்றைய தேதியில் ஆக அதிகப் பிரபலமாக இருந்து வருகிறது என்பது அவர்களது எண்ணம் என்றாள் குரலில் ஒரு
உறுதியுடன். அப்படியானதொரு கருத்து தான் அதிக பிரபலமாகி இருக்கிறது என்பது தான் என் எண்ணம் என்று சொல்லத் தோன்றினாலும் நான் எப்போதும் போல அப்போதும் ஒன்றும் சொல்லவில்லை. ஒரே இனத்தின் மேல் இரு துருவச் சிந்தனைகளைக் கண்டு வியந்து போகிறேன்.

“ஆனால், வெறுப்பு என்னவோ இன்னும் இருக்கத் தானே இருக்கிறது. அதுவும்
குறிப்பாக ஜப்பானிய ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட நாடுகளில்,.. போன
வருடம் பள்ளியில் கொரியாவுக்கு கல்விச் சுற்றுலா கூட்டிக் கொண்டு
போனார்கள். ஆனால், என்னை அனுப்ப என் அம்மா கடைசி வரை ஒத்துக் கொள்ளவே இல்லை", என்று நான் சொன்னதைக் கேட்டு பென்ச்சூவுக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை போலும். சில நொடிகளுக்கு என்னைக் கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள். மாலையில் அதே விஷயங்கள் குறித்து அப்பாவுடன் நான் நிறைய பேசி விவாதித்தேன். அவரும் என் மனதைப் பிரதிபலிப்பவராகவே உரையாடினார்.

உலகப்போர் காலங்களில் இன்னல்கள் அனுபவித்தவர்களுக்காக நான் மிகவும்
வருந்துகிறேன். இன்றைக்கும் ஜப்பானியரை வெறுக்கும் சிலருக்காகவும் கூட. ஏனெனில், அந்தச் செயல்கள் எல்லாமே கொடூரங்கள் நிறைந்தவை என்பதில் யாதொரு ஐயமுமில்லை. அவை அவர்களையெல்லாம் மன்னிக்க முடியாத கசப்பில் தள்ளிவிட்டிருந்தன. அவர்கள் அனுபவித்த இன்னல்களை நம்மில் யாருக்கும் முழுக்க புரிந்து கொள்ள முடியாது. ஆனால், அன்றைய காலகட்டத்தில் ஜப்பானியர்களும் துன்பங்களை அனுபவித்தார்கள் என்பது அவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

அணுகுண்டு போடப்பட்டதால் பெரியளவில் பாதிக்கப்பட்ட ஜப்பான் அதிலிருந்து மீண்டுவர எத்தனை கஷ்டங்கள் பட்டிருக்கும்? நாட்டுப் பற்றும் கர்வமும் சிறுவயது முதலே மூளைச்சலவை செய்வது போலப் புகட்டப்பட்ட ஜப்பானியர்களுக்கும் நாட்டுக்காக உயிரைவிடத் தயாரான
காமிக்காஜேக்களுக்கும் அந்தவித மனோதிடம் வேறு எப்படி வந்திருக்க
முடியும்? யாரேனும் இராணுவத்தில் பணியாற்ற வெறுப்பு காட்டினால், அவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்றே கணிக்கப் பட்டனர். வீட்டையும்
குடும்பத்தையும் விட்டு விலக வேண்டியிருந்தாலும், அந்நாளில் அவர்களுக்கு நாடு தான் முதல் பட்சமாகிப் போயிருந்தது. அவ்வாறான எண்ணங்களே சிறு வயது முதல் அவர்கள் மனங்களில் ஏற்றப்பட்டு வந்தன. போர்க்காலங்களில் பல்வேறு விதமான குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதற்கு இன்றைய தலைமுறையை எப்படி பொறுப்பாக முடியும்? முன்னோர்கள் செய்த அட்டூழியங்களை மறக்கவோ மன்னிக்கவோ அவர்களால் முடியாது போகலாம். குறைந்த
பட்சம், இளைய தலைமுறையைச் சேர்ந்த ஜப்பானியரை முன்னோர்களின்
பின்னணியில் பார்க்காமல் அவர்களுக்காக மட்டும் மதிக்கலாமில்லையா.
என்றைக்கு மறந்து மன்னிக்கும் இந்த கீழை உலகம் ஜப்பானியரின் போர்க்
குற்றங்களை? வரலாறு விரோதத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளது என்பதல்லவோ நிதர்சனமாக இருந்து வருகிறது.


28 ஆகஸ்ட் 2003 - வியாழன்

பல்கலைக்கழக வளாகம் தனியானதோர் உலகம். எங்கெங்கு பார்த்தாலும் துடிப்பான இளையர்கள். உணவகங்களிலோ கேட்கவே வேண்டாம். பல்லினச் சூழலில் பொதுவாக காணக்கூடியதும் சிலவுண்டு. இப்போதெல்லாம் உணவகங்களிலும் புத்தகக் கடைகளிலும் கையில் ஜப்பானிய மொழி நூல்களுடன் நிறைய இளையர்களைக் காண முடிகிறது. ஈர்ப்புடனும் ஈடுபாட்டுடனும் மொழியைக் கற்றுக் கொண்டு நிறைய வாசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் சீனர்கள். அவர்கள் வாசிப்பது ஒன்றும் படம் பார்த்து கதையை அறிந்து கொண்டு ரசிக்கக் கூடிய வெறும் சித்திரக்கதைகள் இல்லை. அவர்கள் வாசிப்பதெல்லாம் சிறந்த புனைவுகளும் ஜப்பானைப் பற்றிய அபுனைவுகளும். பார்க்கப் பார்க்க எனக்குள் ஆச்சரியமும் பெருமிதமும் ஏற்படுகிறது. அம்மா எனக்குக் கற்பித்திருப்பதை விட அதிகமாக இவர்களுக்குத் தெரியும் போலும். என்னால் ஆங்கிலம், சீனம், ஜப்பானிய மொழிகளில் பேசமுடியும் என்பதொன்றும் பெரிய விஷயமல்ல. நான் பிறந்து வளர்ந்த சூழல் அத்தகையது. ஆங்கிலமோ பொதுமொழி. ஆனால், இவ்விளைஞர்கள் வேறொரு மொழியின் பால் ஈர்க்கபட்டு இந்த அளவுக்கு மொழியில் தேர்ச்சியடைவதென்பது தான் மிகவும் பாராட்டத்தக்கதென்று எனக்குத் தோன்றுகிறது.

யூகா வோங் என்ற என் பெயரைப் போலவே சீனப்பெயரும் ஜப்பானிய முதல் பெயரும் சேர்ந்தழைக்கப்படும் சிலரும் ஆங்காங்கே இருக்கத் தான் இருக்கிறார்கள். சீனப் பெயரை மறந்து விடவும் ஜப்பானியராக அறியப் படவுமே இவர்கள் எல்லோரும் விரும்புகின்றனர். பெற்றோரே கூட அவர்களின் இந்த மனநிலைக்கு முதல் காரணம். வெளிநாட்டில் வேலையில் இருக்கும் தந்தை அவ்வப்போது வந்து போக, ஜப்பானியத் தாயால் வளர்க்கப்பட்ட எனது வகுப்பு நண்பர் ஒருவருக்கு தன்னை சிங்கப்பூரராக எண்ணிப் பார்க்கத் தோன்றுவதில்லை. அப்படியென்றால், சிங்கப்பூரர் என்ற அடையாளம் தான் என்னவாகும்? அது என்னவானாலும் அவருக்கு அதில் பெரிய இழப்பில்லை போலும். ஏனெனில், அவருக்குள் இருந்திருக்க வேண்டிய சிங்கப்பூரர் என்ற அடையாளம் ஏற்கனவே முற்றிலும் காணாமல் போய்விட்டிருக்கிறது. தன்னை முழு ஜப்பானியராக நினைத்துக் கொள்ளும் ஆர்வமுடைய இந்த நண்பருக்கு சீக்கிரமே ஜப்பான் நாட்டுக்குப் போகும் திட்டமிருக்கிறது. இருப்பினும், ஜப்பான் பற்றிய பரந்த அறிவோ, அங்கே வாழ்வது குறித்த புரிதலோ கொஞ்சங்கூட இருப்பதாகவே தெரியவில்லை. அந்நாட்டில் ஒன்றி வாழ்வதொன்றும் எளிதல்ல என்பது தான் உண்மை.

அம்மாவிடம் ஜப்பானிய மொழி கற்கவென்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக பன்மடங்கு அதிகரித்துள்ளது. சிறார்கள் முதல் முதியவர் வரை ஏராளமானோர் கற்றுக்கொள்ளப் பிரியப்படுகிறார்கள். அம்மா மிக ஆனந்தமாகத் தன் மொழியைக் கற்பித்துக் கொண்டிருக்கும் வேளையில் எனக்கு மட்டும் சிறுவயதில் புறக்கணிப்புக்கள் மூலம் உள்ளூர ஏற்பட்டிருந்த வடு முற்றிலும் மறையாமல் அவ்வப்போது வலித்தது. எப்போது மறையும் என்ற எதிர்பார்ப்பு என்னில் வலுக்கிறது.


19 ஜூலை 2009 - ஞாயிறு

அப்பாவுடன் பணியாற்றும் டெரிக் என்பவருடைய மகளுக்குத் திருமணம்
நடந்தேறியது. க்ளோரியா பல்கலையில் என்னுடன் படித்தவள் என்ற முறையில்
எனக்கும் நல்ல தோழி. ஆகவே, இன்றைக்குக் காலையில் மூவரும் கிளம்பி தேவாலயத்துக்குப் போனோம். மணமக்கள் இருவரும் புதிதாகச் செய்ததுபோல பளிச்சென்றிருந்தார்கள். திருமணச் சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகுஅங்கிருந்து எல்லா விருந்தினரும் அவரவர் வாகனங்களில் பெரிய உணவகத்தில் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்குச் சென்றோம். உடன் இணையில்லாமல் வந்திருந்த மூன்று நடுத்தர வயதுப் பெண்கள் எங்கள் மேசையில் அமர்த்தப்பட்டிருந்தனர். மூவருமே உயர்ரக ஆடையணிகலன்களுடன் இருந்தனர்.

பசிக்கிடையிலும் அவர்களுக்கு வம்புகளும் வேண்டித்தான் இருந்தது.
ஒலிப்பெருக்கியில் ஒலித்த இசை காதுகளில் மிக இதமாக விழுந்தது
ஒருவகையில் பேசுவதற்கு இசைவாகிப் போனது. லேசாகச் சிரித்து, பின்னர் எளிய அறிமுகங்கள் முடிந்தன. "ம், டெரிக் உங்களைப் பற்றியெல்லாம் ஒருமுறை சொன்ன நினைவிருக்கிறது", என்றார் மூவரில் ஆக இளமையாகத் தெரிந்தவர். திருமண வைபவத்திற்கு தாம் கொடுத்த ஆலோசனைகள் மற்றும் உதவிகள் குறித்து மூவரும் பேச ஆரம்பித்தனர். தவிர்க்க முடியாததால் எங்களுக்குத் தேவையோ சம்மந்தமோ இல்லாத தகவல்களைக் கேட்க
வேண்டியதிருந்தது.

திடீரென்று, மூவரில் மூத்தவராகத் தெரிந்தவர் அம்மாவைப் பார்த்து,
"நீங்கள் எப்படி சீனரைக் கட்டிக் கொண்டீர்கள்?", என்று மாண்டரின்
மொழியில் கேட்டனர். அதுவரை பேசாதிருந்த மூன்றாவது பெண், “என்ன நீங்கள்? ,... அதை அப்படிக் கேட்கக் கூடாது. திரு. வோங் உங்களை எப்படி திருமணம் செய்து கொண்டார் என்று கேட்க வேண்டும்", என்றார். அவர் குரலில்
கலந்திருந்த லேசான நக்கல் யாருக்கும் புரியக் கூடியதாகத் தான் இருந்தது.

காதல் திருமணம் என்றும் தோக்கியோவில் அப்பா படிக்கும் போது நட்பாகி மூன்றாண்டுகளுக்குப் பிறகு மணமானதென்று அம்மா சொன்னார். "அங்கேயே பண்ணிக் கொண்டீர்களா? இல்லை, இங்கே வந்த பிறகா?", என்று முதலில் பேசிய பெண் கேட்டார். அதற்கும் சாதாரணமாக பதில் சொல்லிக் கொண்டே வந்த அம்மா, சற்றும் எதிர்பாராத அடுத்த கேள்வியால் மிகவும் பாதிக்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். அதுவும் இருபத்தைந்தாண்டு கால மணவாழ்வில் பலமுறை எதிர்கொண்ட தன் அனுபவத்திற்குப் பிறகும். "உங்கள் தாத்தா இராணுவத்தில் இருந்தாராமே, அவர் எத்தனை சீனர்களைக் கொன்றிருக்கிறார்?", என்று கேட்டதும் அம்மாவின் முகத்தில் இருந்த இளநகை சடாரென்று மறைந்து போனது.
வலப்புறம் திரும்பி அப்பாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த அம்மாவின் மௌனத்தைப் புரிந்து கொண்டு மேலும் ஏதும் கேட்டுத் துளைக்காமல் விட்டார்களே என்று நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.அப்படியே விடாதிருந்தால், பொது இடத்தில் அம்மா அழுவதோ அப்பா கோபப்படுவதோ நடந்திருக்குமென்பதை நினைத்தாலே எனக்கு மிகவும் அச்சமேற்படுகிறது.

முன்பொரு முறை நான் அம்மாவிடம் அதே விஷயம் குறித்துக் கேட்டதுண்டு.
"மறைந்த என் தாத்தா இராணுவத்தில் மிக உயர்பதவியில் இருந்திருக்கிறார்.
போர்க் காலங்களில் தான் செய்த எதையுமே எங்களிடம் அவர் பேசியதில்லை. அவையெல்லாமே நினைவு கொள்ளத் தக்கவையல்ல என்பதே காரணமாக இருக்க வேண்டும். நினைத்தாலே வருத்தம் தரக் கூடியவை. தாத்தாவைப் போல மேலும் சிலர் குடும்பத்தில் இராணுவத்தில் பணியாற்றியதனால் அவர்களது மனைவி மக்கள் பட்ட துயரங்களும் மிக மிக அதிகம் என்பதே உண்மை. இங்கே வந்து வாழ ஆரம்பித்த பிறகு சிலபல அனுபவங்கள் ஏற்பட்டன எனக்கும் இன வேறுபாட்டு அடிப்படையில்", என்று நிறைய சொன்னதுண்டு அம்மா.

சில ஆண்டுகளுக்கு முன்பு கூட, அணுகுண்டு தான் போரை நிறுத்த ஒரே வழியாக இருந்ததென்று மனதிலிருந்ததைச் சொல்லிவிட்டு ஒரு ஜப்பானிய அமைச்சர் நெருக்கடி காரணமாக பதவி விலகினார். கொய்ஸோமியின் யசூகுனி ஆலயப்பிரவேசம் தொடர்ந்து வெறுப்பைச் சம்பாதித்து வருகிறது. ஜப்பானின் வரலாற்றுப் புத்தகத்தின் உள்ளடக்கம் இன்னொரு புறம் அழுத்ததை மேலும் அதிகமாக்குகிறது.

நானும் ஒரு ஜப்பானியர் தான் இருப்பினும், என்னைப்போல ஏராளமான இளம்
ஜப்பானியர்களும் முறையான மன்னிப்பு கேட்டு இதை முடித்துவிட வேண்டுமென்றே நான் கருதுகிறோம். ஆனால், இவ்வாறான கருத்தை ஜப்பானிய அரசாங்கம் ஏற்றுக்
கொள்வதேயில்லை.

(முற்றும்)

சிறுகதை: ஏந்தல்

இன்னும் விடியாத பொழுது. மஞ்சளொலி வீச்சுள்ள சுரங்கப் பாதையில் இறங்கி நடக்கும்போது, மலாய் ஆடவர்கள் பலவிதமான குல்லாக்களிலும் தங்களுக்கேயுரிய இஸ்லாமிய கலாச்சார புத்தாடைகளோடும் சுகந்த வாசத்தோடும் மலர்ந்த முகத்தோடும் சென்றதைக் கண்டேன்.

மஸ்ஜிட் நெகாராவின் முதன்மையான இரும்பு பெருங்கதவு திறக்கப்பட்டிருந்தது. நுழைகையில் வலது பக்கமாய் பாதிவரை எழுப்பப்பட்ட குறுகியச்சுவர் இருந்தது. சுவரோரத்தில் உட்கார்ந்து கொண்டேன். கழுவாத முகம். கலைந்த கேசம். வியர்வை நாற்ற உடை. என்மேல் நானே நுகரும் துர்வாடை. சிறு துண்டை எடுத்து தலையில் கட்டினேன். அதுவும் குமட்டும் ஒரு வாடையைத் தந்தது.

சிலர் வாசலுக்கு வெளியே தங்கள் வாகனங்களிலிருந்து தரை விரிப்புகளைக் கொண்டு வந்து விரித்துக் கொண்டிருந்தனர். சிலர் மடக்கப்பட்ட மேசைகளைத் தூக்கி வந்து வைத்தனர். கொஞ்ச நேரத்திற்குள் அவ்வெளிப் பகுதி பரபரப்பு சூழ்ந்து கொண்டது. பலகாரப் பாத்திரங்களையும் உணவு வகைப் பாத்திரங்களையும் அடுக்கும் அவசரம், வரிசைப்படுத்தும் லாவகம் அவர்களிடையே தென்பட்டது.

இலேசாய் விடியத் தொடங்கியது.

உட்புகும் ஒவ்வோரிடமும் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் முக மலர்ச்சியோடும் பல்லிளித்தவாறும் “ செலாமாட் ஹரிராயா !” என்று சொல்லியவாறே வலதுக்கையை உயர்த்திக் கொண்டும் அருகில் சென்று கைக்கொடுத்துக் கொண்டும் இருந்தனர்.

நீண்ட அங்கியோடும் முக்காடும் கையுறைகளையும் அணிந்திருந்த ஒரு மாது என்னை நோக்கி வருவதைக் கண்டேன்.

அவள் ஓர் உணவுப் பொட்டலத்தையும் காகிதக் குவளையில் சுடச்சுட தேநீரையும் தந்து “ செலாமாட் ஹரிராயா பாக் ...” எனச் சொல்லி மடிக்கப்பட்ட வெள்ளியை என் சட்டைப்பையில் திணித்தாள்.

கொடுக்கப்பட்டதைத் தின்று முடித்து, குடித்து, அந்தக் குவளையைத் தரையில் ஒரு தட்டுத் தட்டி, சட்டையில் துடைத்து எனக்கு முன்னாக வைத்தேன்.

விடிந்தது.

உள்நுழைந்த சிலர் என் வலது புறத்திலும் இடது புறத்திலுமாய் உட்கார்ந்துகொண்டு தங்கள் பிச்சைப் பாத்திரங்களைத் தங்கள் பையிலிருந்து எடுத்து வைத்தனர். இவர்களில் அநேகர் கைலிகளை அணிந்திருந்தனர். என் வலது புறத்திலும் இடது புறத்திலும் இருந்தவர்கள் தங்கள் முகத்தை சுளித்துக்கொண்டும் முனகிக் கொண்டும் எதிர்வரிசையில் தூரமாய் போய் உட்கார்ந்துக் கொண்டனர்.

சூரியனின் நேரடி ஒளிவீச்சு கண்களைக் கூசச் செய்தது. என் வரிசையில் இருந்தவர்கள் அத்துணைப் பேர்களும் எழுந்து வேறு இடம் தேடிச் சென்றனர். முகத்தை நிமி÷த்த முடியாதபடிக்கு ஒளிவீச்சு கடுமையாய் இருந்தது.

வண்ண வண்ண உடைகளில் கும்பல் கும்பலாக, கூட்டங் கூட்டமாக, ஜோடி ஜோடியாக பள்ளிவாசற்படிகளில் ஏறும் மனிதர்களிடையே குதூகலம் காணப்பட்டது.

சிறிது நேரத்திற்கெல்லாம் ஒலிபெருக்கிகள் பேரொலி எழுப்பின. பிச்சைப் பாத்திரங்களை வைத்திருந்தவர்களிடையே பரப்பரப்பு உண்டானது. எழுந்து படிகளண்டைக்குச் சென்று அங்குமிங்குமாய் நிற்கத் தலைப்பட்டனர். அங்கவீனர்களுக்கு உதவும்படியாக அவர்களின் அன்புக்குரியவர்களும் நம்பிக்கைக்கு உரியவர்களும் அவர்களோடிருந்தனர். சூமீபிய அவயங்களுடைய ஒருவன் தரையில் குப்புறப்படுத்தபடி பள்ளிவாசலின் படிகளையே கண்ணோக்கிக் கொண்டிருந்தான். மொட்டைத் தலையுடனிருந்த பருத்த தேகமுடையவன் கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டிருந்தான். அவன் கழுத்தில் நான்கைந்து ஜெப மாலைகள். அவனின் ஒரு கை, மாவுக்கட்டுடன் கழுத்துக் கயிறால் தாங்கிய வண்ணம் இருந்தது. ஒரு பெண்ணைப் போல சைகைகளைச் செய்து கொண்டிருந்த ஒருவன், மட்டைப்புயலையில் புகைவிட்டுக் கொண்டிருந்தான்.

என் நெற்றியிலிருந்து வழிந்த வியர்வை துளிகள் கண்ணோரங்களிலும் மூக்கின் நுனியிலும் வந்து தரையில் விழுந்தன. தொழுகை முடிந்து வெளிப்படத் தொடங்கினர். நீண்ட பளிங்குக் கல் படிகளில் நிரம்பியது ஜனத்திரள். எங்கும் “ செலாமாட் ஹரி ராயா !” என்ற ஆனந்த சத்தம். ஆனந்த நகர்வு.


சில்லரைகளின் பிச்சைப் பாத்திரங்கள் சப்தம் எழுப்பின. கடைசிப் படிக்கட்டிற்கு வந்தடைந்தவர்களிடம் பிச்சைப் பாத்திரங்கள் ஏந்தப்பட்டன. அநேகமாக பெரும்பாலும் கேஎப்•ஸி குவளைகளும் மெக்டோனல் குவளைகளும்தான் பாத்திரங்களாய் இருந்தன. சிலர் மாத்திரமே அலுமினியப் பாத்திரங்கள் வைத்திருந்தனர். கீழிறங்கி வருவோரிடம் சிலர் வலிந்து பிச்சைக் கேட்பதைப் பார்க்க முடிந்தது. ஒரு சிலரே பிச்சைப் பாத்திரங்களைக் கண்டு கொள்ளாமல் நகர்ந்தனர்.


எங்கும் நகரும் சூழல். ஒருவன் “ நோர்குமலாஸாரி... நோர்குமலாஸாரி... ” என்று கத்திக் கொண்டே உயர்ரக ஆடை அணிந்திருந்த ஒரு பெண்ணை நோக்கி வேகமாக நகர்ந்து தன் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தினான். அதிர்ச்சியடைந்த விதமாய் தன்கையை நெஞ்சில் வைத்து, பிறகு தன் விலையுயர்ந்த பணப்பையைத் திறந்து, அவனுக்கு மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றி சூழ்ந்திருந்த பாத்திரங்களில் நோட்டுகளை இட்டாள். அவள் போட்டு முடிப்பதற்குள் இன்னொரு குரல் ஒலித்தது. “டத்தோ கமாரூடின்... டத்தோ கமாரூடின் ... ” பாத்திரங்களின் ஏந்தல் அப்படியே திசை மாறியது. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் சிவப்பு நோட்டு கிடைத்தது. பிச்சைப் போடப்பட்டதும் கூட்டம் சுறுசுறுப்படைந்து தங்களுக்கு அறிமுகமான முகங்களைத் தேடின. சிலர் கூச்சல் போடாமல் அவர்களுக்கு மட்டும் தெரிந்த செல்வந்தர்களிடம் போய் சலாம் சொல்லி வாங்கிக் கொள்வதைப் பார்த்தேன். ஏனோ எழுந்திருக்க மனமில்லை எனக்கு. இந்தச் சூழலில் இந்த இடத்தில் எனக்குப் பணம் குறிக்கோள் இல்லை ; ஆயினும் என் பிச்சைப் பாத்திரத்தில் பணம் போடப்பட போடப்பட எடுத்து என் சட்டைப்பையில் திணித்துக் கொண்டேன். மடிக்கப்பட்ட, கசக்கப்பட்ட நோட்டுகளால் என் சட்டைப்பையும் நிரம்பியது. என் கழுத்தோடு சுற்றி பின் பக்கம் வத்திருந்த துணிப்பையைத் திறந்து எல்லா நோட்டுகளையும் சில்லரைகளையும் போட்டு மூடினேன். சிறு பிள்ளைகள் தாய்தகப்பன் துணையோடு பிச்சைப் பாத்திரங்களில் சில்லரைகளையும் வெள்ளிகளையும் போட்டுக் கொண்டே ‘ சலாம் ’ சொல்லிப் போனார்கள். மகிழ்ச்சியின் ஆரவாரம் அவர்களின் நடையிலும் பாவணையிலும் இருந்தது.


உட்கார்ந்தவாறே பிச்சைப் பாத்திரங்களை ஏந்தியபடியிருந்தவர்களைச் சிலர் அசட்டைப் பண்ணினர். சிலர் நின்று, தங்கள் பையிலிருந்து எடுத்து, போட்டுச் சென்றனர். நான் பாத்திரத்தை ஏந்தாதபடி தலைக்கவிழ்த்தே கிடந்தேன். போடும் விரல்களை மட்டும் பார்த்தபடி இருந்தேன். நன்றி சொல்வதற்குக் கூட விரும்பவில்லை. நா ஒட்டிக் கொண்டது போலவும் இருந்தது. விரும்பும் போது மாத்திரம் தலையை நிமிர்த்தி காட்சிகளைக் கண்டேன்.

வாசலை ஒட்டி வெண்தலைப்பாகை கட்டிய, வெண்ணங்கித் தரித்த, நீண்ட தாடியுடைய ஒருவர் தரைவிரிப்பில் கிடந்த தன் பொருட்களை எடுத்து தடித்த தன் பெருங்குரலோடு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். சிலர் அவரைச் சுற்றி வட்டமிட்டு நின்ற வண்ணம் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர், தொழுகை நேரத்திற்கு முன்பு பள்ளிவாசலுக்குள் போகாதது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருந்தது. சக வியாபாரிகள் போலவே அவரும் இருந்தார். ஒரு வேளை, வியாபாரத்தைக் கவனிக்க வேண்டி அதிகாலமே தன் தொழுகையைத் தனியாக முடித்திருக்கக் கூடும்.


சூரியன் உச்சிக்கு வரும்போது மனித இரைச்சலும் ஆரவாரமும் இல்லாதிருந்தது. பிச்சை ஏந்திய கூட்டம் தங்கள் பாத்திரங்களைச் சிலர் குப்பைத்தொட்டியில் போட்டனர். சிலர் தங்கள் பைகளில் பத்திரப்படுத்தினர். சிலர்,“ இடுகாட்டிற்குப் போவோம் வாருங்கள் ” என்று மலாய் மொழியில் கூவி அழைத்துச் செல்வதைக் கண்டேன். சிலர், யாரும் பார்த்துவிடாதபடிக்கு மறைமுகமாக தங்கள் பையிலிருந்த வசூலை எண்ணிப் பார்த்து, ஆனந்தித்துச் சென்றனர்.


வியாபாரிகள் பலரும் போய்விட்டிருந்தனர். வானத்தின் மேகங்கள் கருமையடைந்திருந்தன. மழை பெய்வதுபோல தெரிந்ததால் எழுந்து சுரங்கத்தின் வழியாக நடந்தேன். எங்கும் உணவுப் பொட்டலங்களும் காகிதக் குவலைகளும் சிதறிக் கிடந்தன. சிறிய உணவுகளை மிதித்துவிடாதபடிக்குப் பார்த்து நடந்தேன்.

டயாபூமியின் கீழ்த்தள வட்ட பளிங்கு கல்லிருக்கையில் என் போன்றோர் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். சிலர் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தனர். எவரும் தங்களின் உண்மையான வசூலைத் தவறியும் சொல்லாதிருந்தனர். “ அல்ஹம்டுல்லில்லாஹ் . . .” என்றும் “ ரெசெக்கி . . . பெர்ஷீக்கோர்வா அல்லாஹ் யாங் மாஹா பெஞ்ஞாயாங் . . .” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். கைக்கு மாவுக்கட்டு போட்டிருந்தவன் அதனைப் பிரித்துக் கொண்டிருந்தான். அது மாவுக்கட்டுதான் என்று நினைத்திருந்தேன். அவை வெறும் சிகிச்சைக்குப் பயன்படுத்தும் வெறும் துணிகளே என்றறிந்ததும் சிரிப்பு வந்தது எனக்கு.


மழையில் நனைய வேண்டும்போலிருந்ததால் வெளியேறினேன்.


ஆற்றுப் பாலத்தின் கீழ், மறைவின் ஓர் ஓரத்தில், பிச்சைப் பெற்ற சிலர் போதை மருந்தை வாங்கி ‘ ஜேப்’ பண்ணிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர்களும் “பெர்ஷீகோர்லா துஹான் !” என்று சொல்வார்களோ, தெரியவில்லை.

சட்டென மழை நின்று வெயிலடிக்க ஆரம்பித்தது. சீனச் சந்தை தெருவைக் கடக்கும்போது ஒரு பட்ஜெட் விடுதியினருகே நின்ற காரிலிருந்து இரண்டு பேர் பின்பக்க வாகனக்கதவைத் திறந்து, ஒருவனைத் தூக்கிக் கொண்டு விடுதிக்குள் நுழைவதைக் கவனித்தேன். பள்ளிவாசலின் படிகளுக்கு நேராக தரையில் குப்புற படுத்தப்படி பிச்சை வாங்கியவன் அவன். அதிக பணம் கிடைத்திருக்கும். பஞ்சு மெத்தையில் மல்லாக்க படுத்தப்படி “யா அல்லாஹ் ...” என்பானோ, தெரியவில்லை.

தொடர்ந்து நடந்தபோது சீனத்து பழங்கோயில் தென்பட்டது. ‘ டத்தோ காமாரூடின் ’ என்று கத்திக் கூச்சலிட்ட உயரமான மலாய் பெண் அந்தக் கோயில் வாசல் இடது பக்கத்தில் குந்தியப்படி கையை ஏந்தி கொண்டிருந்தனர். வலது பக்கமெல்லாம் வயோதிகச் சீன ஆண்களும் பெண்களுமாய் குந்திய வண்ணம் பாத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தனர். யாரும் அவளை ஒரு வார்த்தையும் கேட்கவும் இல்லை, ஏசவும் இல்லை. ஏனெனில், இந்தச் சீன வயோதிகர்களும் மஸ்ஜிட்டில் பிச்சை எடுத்தவர்கள்தான். தங்களின் அன்றாட வாழ்வை நகர்த்துவதற்காக பிச்சை ஏந்தும் மனிதர்களுக்கு மதம் ஒரு முக்கியமல்லாத ஒன்றுபோல. அல்லது, பணம் எங்கிருந்து சுலபமாக கொட்டுகிறதோ அங்குச் சென்று பெற்றுக்கொள்ள மதமோ அதன் வரையறைகளோ நியாயப்பிரமாணங்களோ இவர்களுக்குத் தடையாக இருத்திக் கொள்ள விரும்புவதேயில்லை. பிச்சைப் போடுபவன் விருத்தசேதனம் பண்ணப்பட்டவனா - பண்ணப்படாதவனா என்று பார்த்தா போடுகிறான்? இல்லை. இவர்கள் வறுமையின் விளிம்பில் இருப்பவர்கள் என்றுதானே நினைத்துப் போடுகிறான். அவள் யாரிடமோ “ இன்ஷா அல்லாஹ் . . .” என்று சொல்வதைச் செவி கேட்டது. சிரித்தப்படி கடந்து போனேன்.

நடந்து கொண்டே முதுகில் கிடந்த பையைத் திருப்பி, திறந்து பார்த்தேன். பணம் அதிகமாய்தானிருந்தன. ஒரு ஜோடி உடைகள் வாங்கிய பிறகு விடுதியில் அறை ஒன்றை எடுத்தேன். வெந்நீர் குளியல் சுகம் தந்தது. பையைத் திறந்து கட்டிலின்மேல் கொட்டினேன். சில்லறைகளும் வெள்ளித் தாட்களும் சிதறின. சில்லறைகளைத் தனியாகச் சேர்த்துவிட்டு 1-2-5-10-50 நோட்டுகளைத் தனித்தனியாகப் பிரித்து வைத்து எண்ணினேன். மலைப்புத் தந்தது. பிச்சை எடுக்க அநேகமானவர்கள் ஏன் போகிறார்கள் என புரிய வந்தது. இங்கே மதத்திற்கு மதம் ஈகை செய்வதில் போட்டாப் போட்டி இருக்கும்வரை, பிச்சைப் பாத்திரங்கள் இருக்கும் என்று தோன்றியது.

முகச் சவரமும் தலை முடி வெட்டியப் பின்பு தலை முடியை வெட்டி முகச் சவரம் செய்து கொண்டேன். இந்திய சிகை திருத்துநர் நெற்றியைத் தட்டி, பிடரியைத் தட்டி, முதுகையும் தட்டி விட்டார். புத்துணர்ச்சியோடு விடுதியை நோக்கி நடந்து கொண்டிருக்கும்போது, “ அண்ணே... அண்ணே ... ” என்றழைக்கும் சத்தம் கேட்டுத் திரும்பினேன். ஒரு மாது தன் குழந்தையை ஏந்தியபடி அருகில் வந்து கையேந்தினாள். அவள் என்னை விட உயரம் கம்மி. கைலியணிந்திருந்தாள். குழந்தை ஐந்து மாதமோ ஆறு மாதமோ இருக்கும். “ அண்ணே ... ஒதவி செய்ங்கண்ணே. பச்சைப் புள்ளைக்கு மாவு வாங்கக் கூட காசில்லேண்னே... ” என்று சொல்லியவாறே கண்ணீர் விட்டாள். ஒட்டிய கன்னங்களும் ஏந்தலின் ஏக்கப் பார்வையும் அவளின்பால் பரிவுக் கொள்ளச் செய்தது.

“உன்னோட புருஷன் எங்கே ? ” என்றேன்.
“ அந்தாளு ஜெயிலுக்குப் போயுட்டாருண்னே ...”
“ மாமியாரு வீடு ... ”
“ வீட்டுக்குத் தெரியாம கோயில்ல வைச்சு தாலி கட்னாருண்னே. அவரு கூட தனியாத்தான் இருந்தேன். இப்ப எங்க வீட்லயும் சேக்க மாட்றாங்க. அவுங்க வீட்லயும் சேக்க மாட்றாங்கண்னே ...”

ஐயோ பாவம் ! பரிதாபம் என்று மனம் எண்ணியது. “ சரி. இப்ப பணம் இல்ல என்கிட்ட. நா தங்கியிருக்கிற ஹோட்டலுக்கு வா. உனக்கு வேண்டியதைத் தரேன். ” என்றதற்கு புருவத்தைச் சுருக்கி யோசிக்க ஆரம்பித்தாள். வார்த்தை ஒன்றும் வராதபடியினால், “ சரி . நீ இங்கேயே இரு. ஒரு முப்பது நிமிஷத்துல வந்து கொடுக்கிறேன். ” என்று சொல்லி நடந்தேன். என்ன நினைத்தாளோ பின் தொடர்ந்து வந்தால். தாயின் அணைப்பில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது.

விடுதியின் வரவேற்பறையில் “ இங்கே நீ உட்காரலாம் ... ” என்று சொல்லி முடிப்பதற்குள்ளே “ இல்லண்னே! கூடவே வரேனே... ” என்றாள். அறையைத் திறந்து அவளை அமர வைத்தேன். என் பையில் நான் ரப்பரால் கட்டி வைத்த ஐம்பது வெள்ளி கட்டு ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினேன். அவள் கண்களை மலர்ந்து ஆச்சரியப்பட்டாள். “ இவ்ளோ பணமா . .? ” என்று கையில் வாங்கியபடியே கேட்டாள். “ எனக்குக் கொடுக்கப்பட்டதை நான் திரும்பக் கொடுக்கிறேன். என்னிடமிருந்து பறிக்கப்படுவதற்கு முன் கொடுக்க வேண்டியவர்களுக்கு நான் கொடுக்கிறேன். அவ்வளவுதான் ” என்றேன். அறையின் குளுமையினூடே அவளின் விரல்கள் மெல்லிய கதியில் நடுங்கின. அவள் அந்தப் பணக்கட்டினையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிரக்ஞையற்ற நொடியில் தலை கவிழ்த்திருந்தவள் சடாரென எழுந்து என் காலில் விழ எத்தனித்தாள். “ ஐயோ ! ” என்றவாறே நான் விலகி நின்றேன். “ நானுன்னை ஆசிர்வதிக்க தகுதியில்லாதவன். போ ! இனி கையேந்தாதே . . எத்தனையோ ஆசிரமங்கள் உண்டு. நல்ல ஆசிரமமாகப் பார்த்து இரு. உனக்கும் பாதுகாப்பு, உன் பிள்ளைக்கும் பாதுகாப்பு .. ” என்றேன். பிள்ளையோடு எழுந்து கையெடுத்துக் கும்பிட்டாள். நானும் அப்படியே செய்தேன். குழந்தை சிணுங்கத் தொடங்கியது.

கதவைத் திறந்து வைத்தேன். “ இனி நான் கையேந்தினால் செருப்பால் அடிங்கண்னே . . ” என்று கொஞ்சமாய் ஆவேசப்பட்டுச் சொல்லி நகர்ந்தாள். கதவை மூடினேன். சிறிது நேரத்திற்குப் பிறகு கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. திறந்தேன் அவள். “மன்னிக்கனும்னே . ஒங்க பேரு . .” என்று தயங்கியவாறு கேட்டாள். “அது முக்கியமல்லம்மா. நா மகாத்மா கிடையாது. . ” என்றவுடன் திரும்பிச் சென்றாள்.

சரியாக ஒரு வருடம் கழித்து, மாரியம்மன் கல்யாண மண்டப வரிசையில் உள்ள ஓர் இந்திய உணவுக்கடையில் உணவருந்திக் கொண்டிருக்கும்போது, மேசைக்கு மேசை சென்று பிச்சைக்காக கையேந்தி கொண்டிருந்தாள் தன் பிள்ளையோடு ஒரு தாய். எங்கேயோ பார்த்ததுபோல நினைவுத்தட்டியது.

என் மேசைக்கு வந்தபோது அவளை உற்றுக் கவனித்தேன். என்னைக் கண்டதும் ஒரு பேயைக் கண்டதுபோல திரும்பி ஓட்டமெடுத்தாள். எல்லோரும் அவளைப் பார்த்த பிறகு என்னைப் பார்த்தார்கள். நான் உணவருந்துவதில் முழு கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன்.


* * * * * *



































Sunday, January 31, 2010

அநங்கம்: புத்திமதிகளை மட்டும் உற்பத்திக்கும் ஆற்றலா இலக்கியம் என்பது?-கே.பாலமுருகன்

அநங்கம் ஆறாவது இதழைச் சிறுகதை சிறப்பிதழாகக் கொண்டு வர வேண்டிய முயற்சியில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டதற்காக வருந்துகிறேன். மேலும் அநங்கம் மலேசிய தீவிர இலக்கிய இதழை இணைய மாத இதழாகக் கொண்டு வர வேண்டும் என்கிற முயற்சியிலும் ஈடுப்பட்டிருந்ததால் காலம் வரையறையின்றி என்னிடமிருந்து இடறியிருந்தன.

இந்தத் தடவை அநங்கம் சிறுகதை இதழுக்காக மொத்தம் 15 கதைகள் சீக்கிரமாகவும், மிகவும் தாமதமாகவும் வந்து சேர்ந்திருப்பது எப்படியிருப்பினும் தீவிர சிற்றேடுகளின் மீதான ஆர்வத்தையும் பங்களிப்புகளையும் காட்டுகிறது. ஆயினும் சில கதைகளை அடுத்த இதழுக்காகத் தவிர்க்க வேண்டியதாகப் போயிற்று.

சிற்றிதழ் வட்டத்தால் எந்தப் போதனைகளையும் எந்த அறங்களையும் எந்தப் பிரச்சாரங்களையும் வழங்க இயலாததால் பெரும்பான்மை சக்தி படைத்தவர்கள் சிற்றிதழ்களின் மீது தங்களின் வணிக மதிப்பீடுகளைக் கடக்க முடியாத போதாமைகளின் மூலம் விமர்சிக்க முயல்வது வேடிக்கையாக இருக்கின்றது. போதனைகளுக்கும் அறிவுரைகளுக்கும் கொஞ்சமும் வரட்சியில்லாத நமது சமூக சூழலில் இலக்கியத்தின் மொத்த ஆற்றலையும் பிறருக்கு அறமும் அறிவுரையும் மட்டுமே போதிக்கக்கூடிய விற்பனைக்காக விரயப்படுத்துவது இன்னமும்

இலக்கியத்திலிருந்து மீளாத வடிவமாக நிலைத்துவிட்டுருப்பதோடு இதுதான் இலக்கியம் என்கிற அங்கீகாரத்தையும் முன்வைப்பது இலக்கியத்தின் மீதான பரிணமிக்க முயலாத தேக்கத்தையே குறிக்கிறது.

காலப்போக்கில் இந்தத் தேக்கம் ஏற்படுத்த போகும் விளைவுகள் ஆபத்தானவை. இலக்கியத்தைக் கொண்டு குற்றங்களுக்கான பாரம்பரியமான புத்திமதிகளை உற்பத்தி செய்வதோடு ஒரு படைப்பாளியின் கடமை முடிவடைகிறது என்கிற புரிதல் நம் நிலப்பரப்பின் இலக்கிய ஆற்றலை ஒர் அறம் போதிக்கும் விற்பனை பொருளாக மட்டுமே காட்சிக்கு வைக்கப்போகும் நிலைமையும் எதிர்காலத்தில் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போதைய படைப்புகளைப் பின்நவீனத்துவம், நவீனத்துவம் என்று வகைப்படுத்தி அதன் மீது புறக்கணிப்பைச் செலுத்தும் சிலர் அதற்கு அப்பாற்பட்ட இலக்கிய வகைகள் பற்றி கவலையில்லாமல், மரபின் நீட்சியில் படைப்பிலக்கியம் அடைந்திருக்கும் அடுத்தக்கட்ட உலக வளர்ச்சியைப் பற்றி அக்கறையில்லாமல் தீவிர இலக்கியத்தைப் பற்றி பரிச்சயமும் இல்லாமல் தமிழறிவைப் பெருமையுடன் பிதற்றிக் கொள்ளும் மேடைவாதிகளாக மட்டுமே சமூகத்தில் மாலை மரியாதைகளுடனும் சிறந்த அங்கீகார சக்திகளாகவும் உலாவருகிறார்கள்.
சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், இதனையடுத்து சமூகக் குற்றங்களை அடையாளம் காட்ட முனைந்தது போதனை இலக்கியம் ஆகும். மு.வ போன்ற சீர்த்திருத்த எழுத்தாளர்களின் ஆளுமைகளுடன் இலக்கியம் இயங்கிய காலக்கட்டத்தில் சிந்தனை புரட்சி மங்கியிருந்த காலக்கட்டத்தில் சமூகத்தை அறத்தின் வழி கட்டமைக்கும் போதனை இலக்கியம் வடிவத்தில் உருவான சிந்தனைகள் வரவேற்க்கப்பட்டன.

அவரைப் பின் தொடர்ந்து அதே வடிவத்தைக் கையாளும் இலக்கிய ஆற்றல் பலரால் கையாளப்பட்டன. மு.வ-வின் எழுத்துக் காலம் முடிவடைந்தும் இன்னமும் கொஞ்சம்கூட அவர் உருவாக்கிய இலக்கிய பாணியை வளர்த்துவிடாமல் அதே பாணியைத் தக்கவைத்துக் கொண்டு எழுதி வருவது மலேசிய இலக்கிய ஆற்றலை ஒரு பின்னடைவிற்குள் முடக்கிவிடும் கடும் செயல் என்றே சொல்ல முடிகிறது.

தற்பொழுது அதிகமாக எழுதி குவிக்கும் ரமணிசந்திரன் போன்ற மெகா தொடர் எழுத்துக்குரிய வகைகளை எப்படி அணுக முடிகிறதோ அதே போலத்தான் வெறும் போதனைகளை இலக்கிய வடிவத்தில் அளித்து இன்னமும் சீர்த்திருத்த பள்ளிகளைப் போன்று இலக்கியத்தின் மீது ஆக்கிரமிப்பைச் செலுத்தி வரும் கும்பலின் அதிகரிப்பு உலக இலக்கிய வளர்ச்சியின் முன் மலேசிய இலக்கியம் அடையாளம் காணப்படாமல் காணாமல் போகக்கூடும் அபாயமும் உண்டு என்கிற வகையில் அணுக முடிகிறது.

சமூகத்தில் நிகழும் குற்றங்களையும் குற்றவாளிகளையும் அடையாளங்கண்டு அவர்களுக்குப் போதனைகளை உற்பத்திக்கும் ஆற்றலை இலக்கியம் எனக் கொண்டாடும் சிந்தனை மாறி, குற்றங்களின் அடிவேருக்குச் சென்று அதனைப் புதிய மதிப்பீடுகளுடன் விவாதிக்கும் ஆற்றலே தரமான இலக்கியம் என்று அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

ம.அ.சந்திரன் அவர்களின் மௌளனம் இதழில் பிரசுரமான சிற்றிதழ்களின் மீதான விமர்சனம் நவீன தமிழ் படைப்பிலக்கியத்தின் முன்னெடுப்பைக் கேலி செய்யும் வகையில் அவை பற்றி ஆழமான விவாதங்களும் கலந்துரையாடல்களும் ஏதுமின்றி உடனடி நிராகரிப்பைக் காட்டி வன்முறையாகச் செயல்பட நினைப்பது படைப்பிலக்கியம் மீதான அக்கறையின்மையைக் காட்டினாலும், இவர்களின் அக்கறையும் கவனமும் இல்லாமலும்கூட மலேசியாவில் உருவாகியிருக்கும் இளம் படைப்பாளிகளின் புதிய முயற்சிகளையும் மாற்றுச் சிந்தனைகளான படைப்பிலக்கியத்தையும் மேலும் வணிக நோக்கமின்றி நடத்தப்படும் சிற்றிதழ்களையும் வளர்க்க முடியும் என்பது நிச்சயம். எவர் போடும் அங்கீகாரத்திற்காகவும் புகழுக்காகவும் கூட்டத்திற்காகவும் ஏங்கித் தவிக்கும் பலவீனம் இலக்கியத்தை மட்டும் முன்னெடுக்கும் சிற்றிதழ்களுக்குக் கிடையாது.

-இதழாசிரியர் கே.பாலமுருகன் -

துறைமுகம் நாவல் விமர்சனம்- அ.விக்னேஸ்வரன்

இறை என பெயரிட்டு, அதை ஓர் உன்னத பொருளாக பார்க்கிறான் மனிதன். மனிதன் - இறை, இதற்கு மத்தியில் மதம். இறையை அடைய மதம் முக்கியமானது தானா? தனக்கு மதம் வேண்டும் என்பது இறையின் விருப்பமா? இறைக்கு மதம் வேண்டும் என்பது மனிதனின் விருப்பமா? மதம் என்று வந்துவிட்டாலே கேள்வி கேட்கக்கூடாது. அப்படிக் கேள்வி கேட்க ஆரம்பித்தால் அதற்கானத் தீர்வு எந்தக் காலத்திலும் கிடைத்துவிடாது என்பார்கள்.

மதம் எனும் போர்வையால் மனிதனுள் ஏற்படும் பிம்பங்கள் பல. வித விதமான புரிதல்கள். இதன் பிரள்வுகளே மூட நம்பிக்கைகள் என அறியப்படுகின்றன. படிப்பறிவு இல்லாத, மதம் எனும் புரிதலில் பயமும், தெளிவற்ற சிந்தனையும் கொண்ட கடலோர மக்களின் வாழ்வைச் சித்தரிக்கும் புதினமாய் அமைந்துள்ளது தோப்பில் முகமது மீரான் எழுதிய துறைமுகம் நாவல்.

குமரி மாவட்டத்தில், இந்திய தேசத்தின் சுதந்திரத்துக்கு முன் நடக்கும் சம்பவங்களைப் பிணைத்து கதைக்களம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய மற்றும் கிருஸ்த்துவ மக்களின் வாழ்வை நாம் கண் முன் நிறுத்துவதில் ஆசிரியரின் சிரத்தைச் சிறப்பாகவே இருக்கிறது. இதில் முக்கியமாக விவரிக்கப்பட்டுள்ளது இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையே. மதத்தை தன் வாழ்வியல் எல்லையாகப் பயன்படுத்தும் மக்கள். தமது நடவடிக்கைகள், மதத்தில் இருக்கிறதா இல்லையா என்ற தெளிவற்ற கோட்பாடுகளோடு இணைத்து தங்களை ஒடுக்கிக் கொள்கிறார்கள்.

பத்திரிக்கை படிக்கக்கூடாது, ஆண்கள் தலையில் முடி வைத்திருக்கக் கூடாது, ஆங்கிலம் பயிலக் கூடாது. இவற்றை செய்துவிட்டால் அது ஹராம் என தீர்மானித்து தம் மதத்தின் மீதான தீவிர பற்றோடு இருக்கிறார்கள். பாமர மக்களிடையே தவறான மத போதனையை வழங்கப்படுகிறது. மதத்தின் பெயரால் மக்களிடையே தவறான போதனைகளைத் திணிக்கப்படும் சம்பவங்கள் மத போதனையாளனின் கதாபாத்திரத்தோடு பேசப்படுகிறது. முகமது அலிகான் என்பவன் ஊருக்கு உயர்ந்தவனாகச் சித்தரிக்கப்படுகிறான். இவனது பிரள்வான சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டால் இஸ்லாமியர்கள் உலக ஒருமைப்பாட்டை பேச முடியாது. மதவெறி தூண்டுதலின் அடிப்படை கருவியாகவே அவனைக் காண முடிகிறது.

கடலை நம்பி வாழும் மக்களின் நிலைபாடு எத்தகைய நிலையில் இருந்தது என்பது நெருடலாக இருக்கிறது. திடீர் திருப்பங்கள் இல்லாமல் யதார்தமாகக் கதை நகர்கிறது. பைத்தியக்காரன் ஊரில் அறிவாளி முட்டாளான கதையாக, ஒரு குறுகிய வட்டத்திற்குள் தம்மை குறுக்கிக் கொண்ட மக்களின் மூட நம்பிக்கைக்கு எதிராக கேள்வியெழுப்புபவர்கள் அவ்வூர் மக்களுக்கு எதிரியாகிறார்கள்.

கதையில் வரும் மீரான் பிள்ளை சிறு வியாபாரி. மீன்களைக் கொழும்புக்கு அனுப்பி அவற்றில் கிடைக்கும் வரும்படியில் குடும்பத்தை நடத்துகிறார். கடலில் கிடைக்கும் மீன்களும் சரி, மீன்களின் விலை நிர்ணயமும் சரி இரண்டுமே அவருக்கு மரண பயத்தைக் கொடுக்கின்றன. மீன்கள் கிடைக்கும் காலத்தில் மார்கெட்டில் விலை இல்லை, மார்கெட்டில் மீன் கிராக்கி ஏறும் சமயம் மீன்கள் கிடைப்பதில்லை. இதில் பொய் புரட்டு என கஷ்ட ஜீவனம் நடத்தும் மக்கள். ஒரு கடிதம் வந்துவிட்டாலும் அதைப்
படிப்பதற்கு ஆள் தேடும் ஊர் மக்கள்.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது முதலாளி வர்க்கத்தின் பொருளாதார அரசியல். ஒரே சமயம், ஓர் ஊர் மக்கள், கடலை நம்பி வாழ்பவர்களாக இருந்தாலும் முதலாளிமார்களின் திருட்டுத்தனத்தை வெளிப்படையாக நாவலாசிரியர் சொல்கிறார். அதாவது பொருளியல் தேடலில் மதம் எல்லாம் ஒரு சால்ஜாப்பு சமாச்சாரம் என்பதே இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. ஈனா பீனா கூனா போன்ற முதலாளிகளின் துரோகத்தால் அக்கடற்கரை கிராமத்தின் பல மக்கள் கடன் சிக்கலிலும் வறுமையில் வாடுகிறார்கள்.

ஒருவனின் அறியாமையை இன்னொருவன் பயன்படுத்திக் கொள்வதைப் போன்ற மட்டகரமான செயல் இருக்க முடியாது. ஆண்கள் முடி வைத்திருந்தால் ஹராம் என்பதால் இன்று எந்தத் தலையை மொட்டை அடிக்கலாம் என சுற்றித் திரிகிறான் ஆனவிளுங்கி எனும் முடி வெட்டுபவன். இவனது கதாபாத்திரம் நகைச்சுவையினூடாகச் சொல்லப்படுகிறது. முடி சரைப்பதில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பது போன்ற பாவனையிலும், தன் சரைக்கும் கத்தியைப் போல் உலகத்தில் கிடையாது எனும் மிதப்பில் இருப்பவன். மதம் தனக்கு சாதகமாக ஒரு விடயத்தைக் கொடுப்பதால் அதை அவன் பவ்யமாக ஏற்றுக் கொள்கிறான்.

அரசியல், நாட்டுப்பற்று என அவர்களின் புரிதலுக்கு சிரமமானவை கூட ஹராம் என அடையாளப்படுத்தப்படுகிறது. இம்மாதிரியான அவல



நிலைகளுக்கு எதிராக குரல் எழுப்பும், ஓராளவு படித்த இளைஞனானவன் விரோதியாகக் கருதப்படுகிறான். மீரான் பிள்ளையின் மகனான காசீமின் கதாபாத்திரம் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தமது சமூகத்தின் விழிப்புக்காக மாறுபட்ட வாழ்க்கையை வாழ்ந்துக்காட்ட முற்படும் இவன் செயல் எப்படி அமைகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. உடனடி மாற்றங்கள் எடுபடுமா என்பதையும் இங்கு நாம் காண வேண்டியுள்ளது.

நாவலின் எழுத்து நடை குறிப்பிட்ட மக்களின் மொழி வழக்கோடு அமைந்துள்ளது. தமிழ், மலையாளம், கொழும்பு, அரபு என கலவைகளைக் கொண்ட பேச்சு நடை வாசிப்புக்கு சிறு தடை என்றே சொல்லலாம். மேற்கோள் வார்த்தைகளைக் கொடுத்திருப்பினும் சரளமான வாசிப்புக்குத் தகுந்த ஒன்றாக அமைத்திருக்கவில்லை. சில விவரிப்புகள் ஜவ்வு போல் இழுப்படுவதும் அயற்சியைக் கொடுக்கிறது. நாவலின் இயல்பு தன்மைக்கு இவ்வகை எழுத்து நடை அவசியமாக அமைந்துள்ளதையும் மறுக்க இயலாது.

குறிப்பிட்டக் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறையைப் பதிவுப்படுத்தியதில் துறைமுக கப்பலின் பயணம் சிறப்பான ஒன்றே

என்னோடு உறங்கும் பூனை-இளைய அப்துல்லாஹ்

பாய்ந்து வந்து என்னோடுதான்
அது உறங்குகிறது.

எனது படுக்ககையில்
எனது அருகாமையில்
என்னை விட்டு அகலமாட்டேன் என்கிறது

பூனையின் முடிகள் சுகமானது
அதன் கழுத்தில் ஒரு தாலி கட்டி
அழகு பார்த்தேன்

பூனையின் தாலி என்னை குத்துகிறது
விலக மறுத்த பூனை
பல வருடங்களாக என்னோடேயே இருக்கிறது

எனக்கு வலிக்கிறது என்பது
பூனைக்கு தெரிகிறதாயினும்
என்னோடுதான் உறங்குகிறது தினம்

அடம் பிடித்து அப்புறபப்படுத்த
முடியாமைக்கு தாலி இருக்கிறது

ஒரு வேள்வி போலத்தான்
பூனைக்கும் எனக்குமான உறவு
அது எப்பொழுது மாறிப்போனது
என்று நினைவில் இல்லை

அழகிய பூனை அது
நிறைந்த மயிர் அதுக்கு
மயிரால் உராயும்
போதெல்லாம் சுகம்

அடங்க மறுக்கிறது பூனை
சில வேளைகளில் அது அத்து மீறுகிறது

ஆனாலும் பூனை
எங்குமே போக விடாத படிக்கு
என்னொடு உறங்குகிறது

கால்கள் பின்னிக்கிடக்கும்
போதெல்லாம் என் கால்களை
அது சொந்தமாக்குகிறது
பூனைக்கு எனது வலியில்
ஒரு சிரிப்பிருக்கிறது.

தினேசுவரி கவிதைகள்

உடல் மறந்த உயிர்கள்

பறவைப் போல்
பறக்க நினைத்து
மின்சார மரத்தில்
மாட்டிக் கொண்ட
பட்டம் நான்......

காகிதம் நான்
என அறிந்து
போகி மரப் புத்தர்
போல் காற்றோடு
அமைதி காத்தேன்...

பறவை மிஞ்சும்
சூறாவளி
நான் என
கதை பரப்பி விட்டார்கள்...

தலைக்கனம்
தலையில்
அமர்ந்ததும்
அமர்க்களப்பட்டேன்...

தலைக் கால்
புரியாமல்
முட்டி மோதினேன்...

காற்றோடு
போராட்டத்தில்
கழிக்கப்பட்டேன்...

காப்பாற்றுவதாகச்
சொல்லி
பலர் பிடித்து
இழுத்ததில்
வாலறுந்து
போனது...

மீதி கிடந்த
உடலில் அழுகிய
பிண வாடை...

உசுப்பி விட்டவன்
இன்னொரு
பட்டத்தோடு.......


கண்ணீரும் கற்களும்.....

இதோ
நான்
மூழ்கிக்
கொண்டிருக்கிறேன்...
மூச்சடைத்து
காதடைத்து
நெஞ்சடைத்தும்
போகிறது....

வாழ்ந்து வந்த
மண் நாசிவரை
மணக்கிறது...
இருந்தும்
கதற முடியாத
அவலனிலையில்....

இது கொலையல்ல....
தற்கொலையல்ல...
இயற்கை மரணமுமல்ல..
மரண தண்டனையுமல்ல....

மனிதர்களின்
இயலாமை....

எத்தனை முறை
நீர் நிலைகளின்
மடியில் மரண சாசனம்....

இன்று

நான்
உங்கள் இயலாமைக்குப்
பலியாகும்
கல்.....
வீசி எறியப்பட்டு
இதோ
மூழ்கிக்கொண்டிருக்கிறேன்.....

* * * * *

பா.சிவம் கவிதை : ஈழம்

இழந்தவற்றைப் பட்டியலிடும்போது
நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன
மேலும் சில இழப்புகள்…

ஒரு மனைவியை
கணவன் முன் சீரழிக்க…
ஒரு தங்கையை
அண்ணன் முன் தோலுரிக்க
அவர்களால்தான் முடிகிறது…

இழந்தவை என்பது
சில கற்களால் ஆன
வீடுகள் மட்டுமேயென்றால்
மண் துகள்களால் ஆன
நிலங்கள் மட்டுமேயென்றால்
கழற்றி வீசியெறியும்
உடமைகள் மட்டுமேயென்றால்

சொர்ப கனவுகளையும்
அர்ப சடலங்களையும்
குழி தோண்டி
புதைத்து விட்டு
திசை தொலைத்து
காணமல் போயிருக்கலாம்…
இழந்தவை என்பது
இதுதான் என
உணர்த்தவியலாத
உன்னதத்தைக் கடந்த



பல்லாண்டுகால பேருண்மை
எனும்போது…

சொல்லற்று
செயலற்று
நாதியற்று
நடுத்தெருவில்
நாறிக்கொண்டிருக்கிறது
தமிழனின் பிணம்…

அதைவிட மகாகேவலம்
அழிப்பதற்காய் அவதரித்த
சிவன்களும்
அவர்தம் பிள்ளைகள்
விநாயகர்களும் – முருகர்களும்கூட
கண்காணா இடங்களில்
புதைக்கப்பட்டு அழிக்கப்படுகிறார்கள்…

சிரித்துக் கொண்டே
நிறுவப்படுகிறார்
இன்னொரு கடவுள்…

மனிதர்களைக் காப்பாற்ற
இயலாக் கடவுள்கள்
அழிக்கப்படும்போது
மனிதர்களால்
வேடிக்கை பார்க்க
மட்டுமே முடிகிறது…

கிரிங்கா என
கிளிநொச்சியும்
முல்லதூவ என
முல்லைத்தீவும்
கற்பழித்து கொல்லப்பட்ட பின்னரும்…

வாழ்க்கை
எதோவொரு திசையில்
நொண்டி நொண்டி
நகர்ந்துக்கொண்டுதானிருக்கிறது…

இனி இழப்பதற்கென்று
புதிதாக ஏதுமில்லை
மிச்சமீதி கடவுள்களைத்
தவிர…
* * * *

சரஸ் பினாங்கு கவிதைகள்

ரணம்

மனதின் கணங்கள்
ஆராயப்பட வேண்டாம்
அங்கே இருப்பது
ஆழமான சேதமும் வலிகளுமே

நட்பு

நான் சந்தித்தவர்களில்
பிரியாமல் இருப்பவள்
நீ மட்டும்தான்
நான் பிரிந்தவர்களில்
சந்திக்காமல் இருப்பவளும்
நீ மட்டும்தான்
நினைவு

மனதோடு இருக்கும்
மழைக்காலம்
இன்னமும் மீளாத
ஒரு வசந்தகாலத்துடன்
உள்ளம் எங்கும் இளமை
இதயம் முழுவதும்
பால்யத்தின் கால்தடங்கள்
கை முளைத்து கால் உதைத்து
சுவாசமிட்ட நினைவுகள்
ஊர்வலம் போகின்றன
இறந்தகாலத்தோடு கைக்கோர்த்து.